டெல்லி:

லேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய இந்தியஅரசு கடும் வர்த்தக கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், காஷ்மீர் விவகாரத்திலும்  மலேசிய அரசு, இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்திய அரசு, இந்த  அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான மனநிலையில்  மலேசிய அரசு நடந்துகொள்வதாலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஐ.நா.வில் பேசியதாலும், கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி, மலேசிய பிரதமர் மகாதீர், சிஏஏக்கு எதிராக  “மதச்சார்பற்ற நாடு என்று கூறிக் கொள்ளும் இந்தியா, இப்போது சில முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டு நான் வருந்துகிறேன்” என்று விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு மத்தியஅரசு கடும் கட்டுப்பாடு களை விதித்துள்ளது.

இதுகுறித்து இந்தியாவின்  வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) அறிவிப்பின்படி, சுத்திகரிக்கப்பட்ட வெளுத்தப்பட்ட டியோடரைஸ் செய்யப்பட்ட பாமாயில் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட வெளுத்த டியோடரைஸ் செய்யப்பட்ட பாமோலின் ஆகியவற்றிற்கு தடைசெய்யப்பட்டுள்ளது” என்று  தெரிவித்துள்ளது.

இந்திய அரசு விதித்துள்ள கட்டுபாடுகள் காரணமாக, கச்சா பாமாயிலை மட்டுமே  இந்தியா இறக்குமதி செய்ய முடியும். இதனால், இதுவரை மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் பாமொலின் இறக்குமதி செய்வது தடைபடும் நிலை எழுந்துள்ளது. மலேசியாவிலிருந்து பாமாயில் வாங்க வேண்டாம் என்று அரசாங்கம் இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில் இந்தியாவுக்கு தேவையான பாமாயிலில் 30% விகிதம் மட்டுமே மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், 70% பாமாயில் இந்தோனேசியாவில் இறந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ள அதிகாரிகள், தேவையான பாமாயில் மலேசியாவுக்கு பதிலாக, இந்தோனேசியாவில் இறக்குதி செய்யலாம் என்று அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இரு நாடுகளில் இருந்த இறக்குமதி செய்யும் செலவுகள் ஒரே அளவில் உள்ளதால், இதில் எந்தவித பாதிப்பு ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்திய விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக  இந்தியா – மலேசியா இடையேயான வர்த்தக உறவில் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. ஏனென்றால், மலேசிய பொருளாதாரத்திற்கு பாமாயில் முக்கியமானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவீதமும் மொத்த ஏற்றுமதியில் 4.5 சதவீதமும் பாமாயில் ஏற்றுமதி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.