டில்லி
இந்தியாவில் கணக்கு வருட தொடக்கத்தை ஜனவரி 1 முதல் மாற்ற அரசு அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் கணக்கு வருடம் ஏப்ரல் 1 ஆரம்பித்து மார்ச் 31 முடிவடைகிறது. இந்த வழக்கம் சுமார் 152 வருடங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதை ஒட்டியே மத்திய அரசு பிப்ரவரி மாதம் இறுதியில் நிதிநிலை அறிக்கை வெகு நாட்களாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. நிதிநிலை அறிக்கையின் திட்டங்கள் கணக்கு வருட தொடக்கமான ஏப்ரல் 1 முதல் அமுலுக்கு வருவது வழக்கமாக இருந்தது.
பாஜக ஆட்சியில் கடந்த இரு வருடங்களாக நிதிநிலை அறிக்கை தேதி மாற்றப்பட்டு பிப்ரவரி 1 ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யபடுகிறது. இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் கூட்டம் ஹல்வா விழா நேற்று நடந்தது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை.
கடந்த 1867 ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றி வரும் இந்த கணக்கு வருட காலத்தை மத்திய அரசு மாற்றி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கணக்கு வருட காலம் மாற்றி அமைப்பது குறித்து பிரதமர் மோடி ஏற்கனவே தமக்கு அப்படி ஓர் எண்ணம் உள்ளதாக கூறி உள்ளார். இந்த மாறுதல் மூலம் பல திட்டங்கள் வருட ஆரம்பமான ஜனவரி 1 முதல் தொடங்க முடியும் எனவும் அந்த திட்டங்களுக்கான பலன்கள் வருட இறுதியில் தெரிய வரும் எனவும் மோடி அப்போது தெரிவித்துள்ளார்.