டில்லி

ரடங்கு நேரத்தில் பணி இழந்த மற்றும் உயிர் இழந்த புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த எந்த விவரமும் தன்னிடம் இல்லை என அரசு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.   இதனால் பல புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் பணியை இழந்தனர்.   போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டதால் அவர்களால் சொந்த ஊருக்கும் திரும்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.   இதனால் பல தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த  ஊருக்கு திரும்பிச் செல்லும் அவலம் ஏற்பட்டு அப்போது பலர் உயிர் இழந்தனர்.

அதன் பிறகு தளர்வு அறிவிக்கப்பட்டபோது 63.07 லட்சம் தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.  இதில் அதிக அளவில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 32.49 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர்.  அடுத்ததாக பீகார் மாநிலத்தில் இருந்து 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஊருக்கு திரும்பினர்.    இவர்களுக்கு ஒவ்வொரு மாநிலமும் உணவு தானியங்கள் வழங்கின.

இந்நிலையில்  மக்களவையில் கொரோனா அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில் பணி இழந்த மற்றும் உயிர் இழந்த புலம் பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறித்து கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.   அத்துடன் புலம் பெயர் தொழிஒலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு தானியங்கள் எவ்வளவு எனவும் கேட்கப்பட்டது.

இதற்கான எழுத்து வடிவிலான பதிலில் மத்திய தொழிலாளர் நல அமைச்சர் சந்தோஷ் கங்வார், “ஊரடங்கு நேரத்தில் பணி இழந்த மற்றும் உயிர் இழந்த புலம்பெயர் தொழிலாளர் குறித்து அரசிடம் எவ்வித விவரமும் கிடையாது.  மேலும் மாநில வாரியாக புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட உணவு தானியம் குறித்த விவரங்களும் அரசிடம் இல்லை.

சுமார் 80 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அதிகப்படியான 5 கிலோ அரிசி மற்றும் கோதுமை, ஒரு கிலோ பருப்பு ஆகியவை நவம்பர் வரை இலவசமாக வழங்கப்படுகிறது.   இதைத் தவிர மார்ச் 25 முதல் ஆகஸ்ட் 31 வரை பிராவிடண்ட் ஃபண்டில் இருந்து ரூ.39,402.94 கோடி அளிக்கப்பட்டுள்ளது.  இதில் மகாராஷ்டிரா 7837.85 கோடியுடன் முதல் இடத்திலும் கர்நாடகா ரூ.5743.96 கோடியுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.