டெல்லி: இந்திய குடியுரிமை வழங்கப்பட்டவர்கள் குறித்து மதம் சார்ந்த தரவுகளைப் பராமரிக்கவில்லை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5 ஆண்டுகளில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 566 முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். இந்த செய்தியை அவர் கூறி 3 மாதங்கள் ஆகின்றன.
ஆனால், இந்திய குடியுரிமை வழங்கப்பட்டவர்கள் குறித்து மதம் சார்ந்த தரவுகளைப் பராமரிக்கவில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் இது குறித்த தரவுகளை அளித்திருக்கிறார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து குடியுரிமை வழங்கப்பட்டவர்களின் மதம் வாரியான விவரங்களையும் அறிய முற்பட்ட சிபிஐ உறுப்பினர் கே சோமபராசாத்தின் எழுத்துப்பூர்வ கேள்விக்கு ராய் இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
அதன்படி, 2014ம் ஆண்டு முதல் இந்திய குடியுரிமை வழங்கப்பட்ட 18,999 பேரில் 15,000 க்கும் மேற்பட்டோர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். அதற்கு காரணம் வங்கதேசத்துடன் ஏற்படுத்திக் கொண்ட நில எல்லை ஒப்பந்தமாகும்.
இந்த 18,999 பேரில் 15,036 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 14,864 பேருக்கு நில எல்லை ஒப்பந்தம் கையெழுத்திட்ட பின்னர் குடியுரிமை வழங்கப்பட்டது.
இந்த மக்கள் ஏற்கனவே இந்திய எல்லைக்குள் வசித்து வந்ததால், இந்தியாவுக்கு வந்த பின்னர் 172 வங்கதேசத்தினருக்கு மட்டுமே இந்த காலகட்டத்தில் தனிநபர் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட்டது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் உள்துறை அமைச்சக தரவுகளின்படி, இந்த காலகட்டத்தில் 2,935 பாகிஸ்தானியர்கள், 914 ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள், 113 இலங்கை மக்கள் மற்றும் மியான்மரை சேர்ந்த ஒருவர் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.