புதுடெல்லி: ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில், விற்பனை விலைக்கும், சர்க்கிள் விலைக்கும் இடையில் 20 சதவிகித வேறுபாட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்க்கிள் விலை என்பது மதிப்பீட்டாளர் விலை என்று அறியப்படுகிறது. அதாவது, அந்தந்த பகுதிக்கேற்ப நிர்ணயம் செய்யப்படும் விலையாகும். இந்த நிர்ணயத்தை மாநில அரசுகள் மேற்கொள்ளலாம். இதன்மூலம், வாங்கும் விலையை கணிக்கலாம்.
இந்நிலையில், இந்த மதிப்பீட்டாளர் விலைக்கும், விற்பனை விலைக்கும் இடையே, 20% வேறுபாட்டை அனுமதிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இந்த அனுமதிப்பட்ட வேறுபாடு முன்னர் 10% என்பதாக இருந்தது.
கொரோனா பொருளாதார முடக்கத்தால், ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனங்கள், தாங்கள் கட்டிய வீடுகளை, பல இடங்களில் மதிப்பீட்டாளர் விலைக்கும் குறைவாக விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சலுகை, 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதிவரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.2 கோடி வரை மதிப்புள்ள தங்குமிட கட்டடங்களுக்கு இந்த சலுகைப் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.