புதுடெல்லி: பால் சார்ந்த துறையில் தனியார்கள் அதிகளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டுமென மத்திய அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தயாரிப்பு மற்றும் சேவைகள் சார்ந்த துறையைவிட, பால்வளத் துறை அதிக லாபம் தரும் ஒன்றாக இருப்பதால், தனியார் நிறுவனங்கள் இதில் அதிக முதலீடு செய்ய முன்வர வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; இந்தியாவை 350 கோடி லட்சம் மதிப்பிலான பொருளாதாரமாக மாற்றுவது மற்றும் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக்குவது உள்ளிட்டவைகளுக்காக பால்வளத் துறையில் அதிக நிதியை வழங்கி வருகிறது அரசு.
எனவே, இந்த நல்ல வாய்ப்பை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். தற்போதைய நிலையில் இத்துறையில் செய்யப்படும் முதலீடுகளில் அதிக அளவிலானவை அரசினுடையதே. தனியார்களின் பங்களிப்பு மிகவும் குறைவே.
இது வெறுமனே வறுமை ஒழிப்பு முயற்சி மட்டுமல்ல; நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான முயற்சியும்கூட. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பால்வளத் துறையின் பங்கு அதிகமானதாகும்” என்று கூறப்பட்டுள்ளது.