டில்லி
பட்டமேற்படிப்புக்களுக்கான நீட் தேர்வுக்கு கட் ஆஃப் மதிப்பெண்களை 6 % குறைக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
மருத்துவத் துறை பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்களில் சேர தற்போது தகுதித் தேர்வான நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பட்ட மேற்படிப்புக்களில் சேர குறைந்த பட்ச மதிப்பெண்களை நீட் தேர்வில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை ஆங்கிலத்தில் கட் ஆஃப் மார்க்குகள் என அழைப்பது வழக்கமாகும். இந்த அளவு மதிப்பெண்களை பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கு தகுதி அடைவார்கள்.
இந்நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் பட்டமேற்படிப்பில் சேர கட் ஆஃப் மதிப்பெண்களை குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனையின்படி தற்போதைய கல்வி ஆண்டான 2019-20 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் 6 % மதிப்பெண்களை குறைக்க அனுமதி அளித்துள்ளது.
அதன்படி பொது வகுப்பினருக்கு குறைந்த பட்ச மதிப்பெண் 44% ஆகவும், பொது வகுப்பில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு 39% ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் பிற்படுத்தப்பட்ட, தலித், மற்றும் பழங்குடியினருக்கு குறைந்த பட்ச மதிப்பெண் 34% ஆக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் இந்த மதிப்பெண் முறை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மருத்துவக் கல்வி நிலையங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.