டில்லி

ரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் நிறுவனத்துக்கு மத்திய அரசு 4 ஜி அலைக்கற்றையை ஒதுக்கி உள்ளது.

அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஏற்கனவே 4 ஜி அலைக்கற்றை பயன்பாட்டின் மூலம்  இணைய வசதி அளித்து வருகிறது.   ஆனால் அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் நிறுவனம் இதுவரை 3 ஜி அலைக்கற்றை மூலமாக மட்டுமே இணைய வசதி அளிக்கிறது.   இதனால் தனியார் நி|நிறுவனங்களை விட பி எஸ் என் எல் நிறுவன இணைய வசதி மிகவும் மெதுவாக உள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் 5 ஜி அலைக்கற்றைகளுக்கான ஏலம் நடந்து வருகிறது.  இதில் தனியார் நிறுவனங்களான ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா, அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு ஏலம் எடுத்து வருகின்றன.   இதில் அதானி நிறுவனம் சொந்த பயன்பாட்டுக்கு 5 ஜி அலைக்கற்றையைப் பயன்படுத்த உள்ளது.

இந்நிலையில் அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ.1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ததாகச் செய்திகள் வெளியாகின.   மேலும் பி எஸ் என் எல் நிறுவனத்துடன் பி பி என் எல் நிறுவனமும் இணைக்கப்பட அரசு முடிவு செய்துள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது. 

சமீபத்தில் கிடைத்த செய்தியின் படி இறுதியாக பி எஸ் என் எல் நிறுவனத்துக்கு இந்திய அரசு 4 ஜி அலைக்கற்றையை ஒதுக்க முன்வந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.   மேலும் அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூ.1.64 லட்சம் கோடியில் இந்த அலைக்கற்றைக்கான மதிப்பும் அடங்கும் எனவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.   மற்ற நிறுவனங்கள்5 ஜி சேவை வழங்கும் வேளையில் பி எஸ் என் எல் 4 ஜி சேவையைத் தொடங்க உள்ளது.