டில்லி
மத்திய அரசு காஷ்மீரில் அமைதி இல்லாததையும் கல்லெறி போராட்டம் நடைபெற்றதையும் ஒப்புக் கொண்டுள்ளது.
கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டு மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. தற்போது காஷ்மீரில் இணையம் மற்றும் தொலைப்பேசி முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்வது என்னவென தெரியாத நிலை உள்ளது. காஷ்மீரில் அமைதி நிலவுவதாக அரசு செய்திகளை வெளியிட்டு வருகிறது.
வெளிநாட்டு ஊடகமான ரூட்டர் வெளியிட்ட செய்தியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீநகரில் உள்ள சவுரா பகுதியில் சுமார் 10000 பேர் கலந்துக் கொண்ட போராட்டம் நிகழ்ந்ததாகவும் அந்த போராட்டத்தில் பலர் கல்லெறிந்ததால் கடும் வன்முறை நிகழ்ந்ததாகவும் கூறப்பட்டிருந்தது. இதை அரசு மறுத்துஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் காஷ்மீரின் எந்த பகுதியிலும் 20க்கு மேற்பட்டோர் கூடவோ போராட்டம் நடத்தவோ இல்லை எனவும் கல்லெறி தாக்குதல்கள் நடைபெறவில்லை எனவும் தெரிவித்தது.
அதன் பிறகு பிபிசி மற்றும் அல் ஜசீரா ஆகிய ஊடகங்கள் ரூட்டர் வெளியிட்ட செய்தி குறித்த வீடியோக்களை வெளியிட்டன. அந்த வீடியோவில் ரூட்டர் செய்தியில் உள்ளதைப் போல் 10000 பேர் இல்லை எனினும் அரசு தெரிவித்ததைப் போல் 20 பேருக்கும் குறைவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்கு போராட்டம் நடந்தது உண்மை என அந்த ஊடகங்கள் உறுதி செய்தன.
இந்நிலையில் நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த 9 ஆம் தேதி அன்று சவுரா பகுதியில் உள்ள மசூதியில் தொழுகை செய்து விட்டு வந்த ஒரு சிலர் அமைதியைக் கெடுக்கும் வகையில் சில நிகழ்வுகளை நடத்தியதாகச் செய்தி வெளியிட்டது. அத்துடன் இந்த நிகழ்வுகளில் மசூதியில் இருந்த வந்தவர்களுடன் மற்றும் சிலரும் இணைந்ததாகக் கூறப்பட்டிருந்தது.
இது அரசு அடித்த முதல் பல்டியாகும்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய காவல்துறையின் சட்டம் ஒழுங்கு இயக்குநர் முனிர் கான், “காஷ்மீரில் ஸ்ரீநகர் மற்றும் சில மாவட்டங்களில் ஆங்காங்கே கல்லெறி சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. அடிபட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் உயிர் அபாயம் நிகழவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இது அரசின் இரண்டாம் பல்டி ஆகும்.