மாஸ்கோ: கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக ரஷ்யாவில் இதுவரை 3 ஆளுநர்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக, கமசட்கா ஆளுநர் விளாடிமிர் இலியுகின் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் கடிதம் அளித்தார்.
அந்த ராஜினாமா கடிதத்தை அதிபர் புடின் ஏற்றுக்கொண்டார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டு ஆளுநர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், மூன்றாவதாக ஒரு ஆளுநர் ராஜினாமா செய்திருப்பது ரஷ்யாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ரஷ்ய அதிபர் புடின் அந்நாட்டு தொலைதுாரப் பகுதிகளில் பணியாற்றும் ஆளுநர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அழைப்பு விடுத்த இரண்டு தினங்களுக்குள் மூன்றாவது ஆளுநர் ராஜினாமா செய்துள்ளார். 10க்கும் குறைவான கொரோனா தொற்று பாதிப்பு உள்ள ஆர்க்காங்கெல்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநர் கடந்த வியாழக்கிழமை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் கொடுத்த அழுத்தம் காரணமாகவும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் கமசட்கா கவர்னர் ராஜினாமா செய்ததாக தொடர்புடைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.