சென்னை:

பெரும்பான்மையை நிரூபிக்க, தங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களை பாதுகாப்பாக அடைத்து வைப்பது தவறல்ல. பாஜக கூட அப்படி செய்துள்ளது என்று அக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெறும் அதிகார போட்டி காரணமாக, சசிகலா தரப்பு தங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் பலரை சென்னை கூவத்தூ் பகுதியில் உள்ள இரு ஓட்டல்களில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்த நிலையில் சசிகலாவுக்கு தமிழகம் முழுதும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. சமூகவலைதளங்களில் சசிகலா எதிர்ப்பு பதிவுகள் நிறைந்து காணப்படுகின்றன.

மேலும், தமிழகம் முழுதும் தங்கள் எம்.எல்.ஏவை காணவில்லை என்று பல தொகுதி மக்களும் காவல்துறையில் புகார் அளித்து வருகிறார்கள். தனது மனைவியான எம்.எல்.ஏவை காணவில்லை என்று கணவர், உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்ததும் நடந்தது. சமூக ஆர்வலர்கள்சிலரும், எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டுள்ளதாக வழக்கு தொடுத்தனர்.

இது குறித்த வழக்கில், எம்.எல்.ஏக்களுக்கு  உணவு சரிவர அளிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பலர் தங்கள் தொகுதி (அ.தி.மு.க.) எம்.எல்.ஏக்களுக்கு “சசிகலாவை ஆதரிக்காதீர்” என்றுகோரிக்கை விடுத்துவருகிறார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் பலரும், “சசிகலா தரப்பினர் எம்.எல்.ஏக்களை கடத்தி வைத்திருக்கிறார்கள்” என்று புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று சென்னை வந்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, ஆளுநர் வித்யாசாகரை சந்தித்தார்.

பிறகு அவர், “சசிகலாவுக்கு மெஜாரிட்டி எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது. அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் அழைக்க வேண்டும்.

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வர இருக்கிறது என்று காரணம் காட்டி சசிகலாவை தவிர்ப்பது தவறு. ஒருவர் நாளை சாலையில் செல்லும்போது விபத்து ஏற்படும் என்பதற்காக இன்று அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தவறு” என்றார்.

எம்.எல்.ஏக்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகார் குறித்து கேட்டபோது, “அதில் ஒன்றும் தவறில்லை. இதே வேலையை எல்லோரும் செய்திருக்கிறார்கள். பாஜகவும் செய்திருக்கிறது” என்றார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை உட்பட அக் கட்சியினர், “சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் நிலையில் சசிகலாவை பதவியேற்க அழைக்கக்கூடாது” என்று தெரிவித்துவரும் நிலையில் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.