சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானிய குழு சட்டத்துக்கு புறம்பானது, இது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும் என குற்றம் சாட்டி யுள்ளதுடன், மசோதா குறித்து விளக்கம் அளிக்க கூறி, தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதி உள்ளார்.
பல்கலைக்கழக துணைவேந்தர்களாக ஆளுநர்களே இருக்கும் வகையில் மத்தியஅரசின் சட்டம் உள்ளது. ஆனால், கல்விப்பணியில் ஆளுநர்களின் தலையீட்டை குறைக்கும் வகையில், சில மாநிலங்களில், பல்கலைக்கழக துணைவேந்தர்களாக மாநில முதல்வர்களே இருக்கும் வகையில் சட்ட திருத்தங்கள் செய்துள்ளன. அதுபோல, தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பல்கலைக்கழகங்களில் வேந்தரான மாநில ஆளுநர் இருந்து வருகிறார். இவர்மூலம் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரும் வகையில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலும், தேவைப்பட்டால் துணை வேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் 2 மசோதாக்கள் கடந்த ஏப்ரல் 25ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதற்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தாலும் திமுக கூட்டணி மெஜாரிட்டி இருந்ததால்மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, அந்த மசோதா தமிழக ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதாவுக்கு இதுவரை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தரவில்லை. ஆனால், மசோதா குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கோரி கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த கடிதத்தில், துணை வேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக சட்டத்துக்கு புறம்பானது என்று குறியுள்ள ஆளுநர், இது துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் தலையீட்டுக்கு வழி வகுக்கிறது என்று விமர்சித்துள்ளார். மேலும், பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் அளிக்குமாறு கோரியுள்ளார்.