கோவை,

மிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று இரண்டாவது நாளாக கோவை பகுதியில் ஆய்வு செய்து வருகிறார்.

நேற்று கோவை சென்ற ஆளுநர் பன்வாரிலால், அங்கு அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு மேற்கொண்டார்.

கோவை  பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட அவர், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த தன்னிச்சையான செயல்பாடுக்கு எதிர்க்கட்சி கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், தமிழக அமைச்சர் ஜெயக்குமாரோ, ஆய்வு செய்வதில் தவறு இல்லை என்றார்.

இந்நிலையில், இன்று கோவையில் இரண்டாவது நாளாக ஆளுநர் தனது ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.  கோவை பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பைறையை ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து,  கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பன்வாரிலால், தமிழில் வணக்கம் என கூறி பேச்சை துவக்கினார். அப்போது,

தென் இந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்த நகரம் மேலும் வளர்ச்சி அடையும் என்றார். தமிழகத்தில்  தொழில் முதலீட்டிற்கு ஏற்ற நகரங்களின் பட்டியலில் கோவையும் ஒன்றாக உள்ளது, கோவை பஸ் நிலையத்தில் சுகாதார பணிகள் மற்றும் கழிப்பறைகள் சிறப்பாக உள்ளன.  கோவை நகரம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. காந்திபுரம் பஸ் நிலையத்தை தூய்மையாக வைத்துள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு பாராட்டுக்கள்.

அகமும், புறமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதையே அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. தூய்மை இந்தியா திட்டத்தை குடிசை பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

கோவையை போல் மீதமுள்ள மாவட்டங்களிலும் எனது ஆய்வு பணிகள் தொடரும் என தெரிவித்தார்.