தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு அனுமதி அளிக்காது என மாவட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், உறுதி யளித்துள்ளார். இன்று காலை நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கூட்டம் முடிவடைந்த பிறகு, மாவட்ட ஆட்சியர் இதை தெரிவித்தார்.
ஆக்சிஜன் தயாரித்து வழங்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு அனுமதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் மனுவுக்கு பதில் அளித்த மத்தியஅரசு ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று அறிவித்தது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிசன் உற்பத்திற்கு அனுமதி வழங்கலாமா? என்பது குறித்து கருத்துகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ண பிரான், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, மற்றும் பொதுமக்கள் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் காலை 8 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கிய பின்னர் வந்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பலர் ஆலைக்கு எதிராக கோஷமிட்டனர். கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இந்த கூட்டத்திற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ராஜேஸ், பாலமுருகன் தாமதமாக வந்தனர். அவர்களை உள்ளே அனுமதிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள், போலீஸ் பாதுகாப்புடன் உள்ளே சென்றனர்.
கூட்டம் சுமார் 45 நிமிடங்கள் நடந்தது. கூட்டத்தில் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. காவலர்கள் அவர்களை அப்புறப்படுத்தினர். பெரும்பாலோனோர் ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதி வழங்கக்கூடாது என எதிர்த்தனர்.
இதைத்தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய, ஆட்சியர் செந்தில்ராஜ் பேசுகையில்,”ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்ற அரசின் கொள்கை முடிவில் அரசு உறுதியாக உள்ளது” என்று தெரிவித்தார். ஆலையை திறக்க யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் சிலர் மனுவாக தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
கருத்து கேட்பு கூட்டத்தை முன்னிட்டு எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில், விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் குவிந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களை எதிர்ப்பாளர்கள் விரட்டியடித்தனர். உடனடியாக, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
கூட்டத்திற்கு பின்னர் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கூறுகையில், ஆலை திறக்கப்படாது என்று ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். இதனால் நாங்கள் நம்பி செல்கிறோம். துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் ரத்தத்தின் மீது ஆணையாக ஆலையை திறக்க விடமாட்டோம் என்று தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் அதிமுக, திமுகவைச் சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அமமுக நிர்வாகி இரா.ஹென்றி தாமஸ் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் அமைதியாக இருக்கும் தூத்துக்குடி போர்க்களமாக மாறும் என்று எச்சரிக்கை விடுத்தார்.