சென்னை:
உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பல ஊர்களில் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் பதவி ஏலம் விடப்படும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவிற்குட்பட்ட பொண்ணங்குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த மற்றொரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதுகுறித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், முதல்வரின் சாதனைகள் கிராமம் வரை சென்றுள்ளதால், உள்ளாட்சி தேர்தலில் ஒட்டு மொத்தமாக வெற்றி பெறுவோம் என்றும் அவர் கூறினார்.