புதுடெல்லி:
100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக பிரிட்டிஷ் அரசு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது.
அமிர்தசரஸ் நகரில் ஜலியான் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்கள், சிறுவர்கள் என 379 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
10 நிமிடங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 1,650 தடவை சுட்டனர். பிரிட்டிஷ் அரசின் மதிப்பீட்டின் படி மொத்தம் 379 பேர் இந்நிகழ்வில் இறந்தனர்.
ஆனால், தனியார்களின் தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மகாத்மா காந்தியால் அமைக்கப்பட்ட இந்தியக் குழுவின் கணக்கெடுப்பின்படி, ஆயிரம் பேர் கொல்லப்பட்டது உறுதியானது.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, அரசு சார்பில் ஜாலியன் படுகொலைக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
இந்த துயரச் சம்பவத்துக்கு முழுமையாக மன்னிப்பு கேட்பது எனவும் நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு மன்னிப்பு கோருவதின் மூலம் இரு நாடுகளிடையே நட்புறவு வலுப்பெறும் என எம்பிக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.