டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தமிழகஅரசின் கொள்கை முடிவு, எனவே வேதாந்தா நிறுவன்ததின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழகஅரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உயிர்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். ஸ்டெர்லைட் காப்பர் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு மட்டுமின்றி அந்த பகுதியின் உள்ள நிலத்தடி நீர்மட்டமும் பாதிப்படைந்தது. இதன் காரணமாக ஆலையை மூட வலியுறுத்தி நடத்தப்பட்டு வந்த தொடர் போராட்டம் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்றது. 100வது நாள் போராட்டத்தின்போது, நடைபெற்ற மாபெரும் பேரணியில் வன்முறை வெடித்து, காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த 2018 மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு அதற்கு சீல் வைத்தது. இதுகுறித்த அரசாணையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் என பல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த தமிழக அரசின் அரசாணை செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியது.
உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன்மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஆலையின் மனுவுக்குஎதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவாகும். இதில் ஆலை சுற்றுச்சூழலுக்கு கடும் மாசு விளைவிக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டதால் தான், அதனை கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் அதற்கு சீல் வைக்க உத்தரவிட்டது. மேலும் ஒரு தரப்பின் வாதத்தை கேட்டு ஒருதலைபட்சமாக உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது என்ற ஆலை நிர்வாகத்தின் குற்றச்சாட்டு என்பது கிரிமினல் அவமதிப்பு என்றே கூறவேண்டும். எனவே இந்த ஒரு காரணத்தை அடிப்படையாக கொண்டே ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.