கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்தாக கைது செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 8மீன்பிடி படகுகளை  இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் அரசுடைமையாக்கி உத்தரவிட்டு உள்ளது. இது தமிழ்நாடு மீனவர்களிடையே அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்கள் வங்காள விரிகுடாவில் மீன்பிடிக்கும்போது, எல்லைதாண்டி மீன்பிடிக்க வருவதாக இலங்கை கடற்படையினர் குற்றம் சாட்டுவதும், அவர்களை கைது செய்வதுடன் தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்துவதும், பறிமுதல் செய்வதும் தொடர்கிறது. கடலில் மீன்பிடிக்க செல்லும் ராமேசுவரம், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம் உள்பட மீன்பிடிக்க செல்ல தமிழக மீனவர்களின் பல படகுகள் மூழ்கடிக்கப்பட்டு உள்ளதுடன், சேதப்படுத்தம் பணிகளையும் இலங்கை கடற்படையினர் செய்து வருகிறது. மேலும்,  தமிழகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற ஏராளமான மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த படகுகள் இலங்கையில் ஊர்காவல்துறை, காங்கேசன் துறை, மன்னார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லட்சகணக்கான ரூபாய் மதிப்புள்ள தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பி தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், அதை இலங்கை அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு (2022)  வரை சுமார் 94 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து, சில படகுகள் விடுவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின்  8படகுகளை, இலங்கை  ஊர்க்காவல்துறை  அரசுடைமையாக்கி  உத்தர விட்டது. அதேவேளையில், ராமேசுவரத்தை சேர்ந்த 3 விசைப்படகுகள், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த ஒரு விசைப்படகு என 4 படகுகளை விடுவித்தும் ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. விடுவிக்கப்பட்ட 4 படகுகளையும் இத்தனை நாட்கள் பராமரித்து பாதுகாப்பாக நிறுத்தி வந்ததற்கான தொகையை வருகிற மார்ச் 14-ந் தேதிக்குள் படகின் உரிமையாளர்கள் அபராதமாக கோர்ட்டில் செலுத்தினால் மட்டுமே இந்த 4 படகுகளும் விடுவிக்கப்படும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு இருக்கிறது.

அரசுடையாக்கப்பட்டுள்ள  8 படகுகளில் ராமேசுவரத்தை சேர்ந்த 4 விசைப்படகுகளும், மண்டபத்தை சேர்ந்த ஒரு படகும், ஜெகதாப்பட் டினத்தை சேர்ந்த 2 படகுகளும், நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒரு படகும் அடங்கும்.