லக்னோ:

குழந்தைகளை தெரு நாய்கள் கடிப்பதற்கு அரசு பொறுப்பேற்காது என்று உத்தரபிரதேச மாநில பாஜக அமைச்சர் சுரேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரேதச மாநிலம் சிதாப்பூர் மாவட்டம் கைராபாத் கிராமத்தில் சில தினங்களாக காட்டு நாய்கள் 14 குழந்தைகளை கடித்து குதறியுள்ளது. இதனால் கிராம மக்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டனர். இதையத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் சிதாப்பூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். பாதித்த குழந்தைகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும், மக்களை அச்சுறுத்தும் நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இரவு நேர பைனாகுலர், ஆளில்லா விமானம் மூலம் சிறந்த வல்லுனர்களை கொண்டு நாய்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் வாரனாசியில் மாநில நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் சுரேஷ் கண்ணா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஒரு விலங்கு ஊருக்குள் புகுந்து யாரையாவது கடித்தால், அதற்கு மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் எப்படி பொறுப்பாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.

சுரேஷ் கண்ணா கருத்து குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் அலோக் அவஸ்தி கூறுகையில், ‘‘ நாய்களின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சுரேஷ் கண்ணா தவறுதலாக இந்த கருத்தை தெரிவித்திருக்கலாம்’’ என்றார்.