E20 பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவு மட்டுமின்றி, அதன் தரத்தையும் உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது E20 பெட்ரோலில் குளோரைடு மாசு 3 ppm-க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், இது கட்டாய விதியாக இல்லாமல், தன்னார்வ தரநிலையாக மட்டுமே உள்ளது. இந்த விதிமுறையை எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட எரிபொருள் விநியோக அமைப்பில் உள்ள அனைவரும் கட்டாயமாகப் பின்பற்றும் வகையில் மாற்ற அரசு பரிசீலித்து வருகிறது.

இதற்கான பணிகளை இந்திய தரநிலைகள் அமைப்பு (BIS) மேற்கொண்டு வருகிறது. மாசு அளவுக்கான வரம்புகளை கட்டாயமாக்குவதன் மூலம் பெட்ரோலின் தரத்தை மேலும் மேம்படுத்த முடியும் என்று அரசு கருதுகிறது.

சமீபத்தில், பெட்ரோல் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் E20 பெட்ரோலில் சில இடங்களில் அதிக அளவு குளோரைடு மற்றும் ஈரப்பதம் இருப்பதாக வாகன உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற மாசுபாடுகள் வாகனங்களின் சில உதிரிபாகங்களில் பழுது ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சில வாகனங்களின் எரிபொருள் டேங்குகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பெட்ரோல் மாதிரிகளிலும் அதிக அளவு குளோரைடு இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தியா, பெட்ரோலில் 20 சதவீத எத்தனாலை கலக்கும் E20 இலக்கை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே எட்டியுள்ளது. எதிர்காலத்தில் இதைவிட அதிக அளவு எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், எரிபொருளின் தரத்தை உறுதி செய்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது.