டெல்லி: இஸ்ரேலின் உளவு நிறுவனம், மற்ற தனியார் உளவு நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருவது அரசாங்கத்துக்கு முன்பே தெரியும் என்று முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை கூறியிருக்கிறார்.

இந்தியாவில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் வாட்ஸ் அப் தகவல்கள் திருடப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த தகவல் முக்கிய அரசியல் கட்சிகளை  அசைத்து பார்த்திருக்கிறது. இந்தியர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் திருடப்படுகின்றன என்று கடந்த மே மாதமே அரசுக்கு தகவல் தெரிவித்ததாக வாட்ஸ் அப் கூறியிருக்கிறது.

இந் நிலையில், இஸ்ரேல் உளவு நிறுவனமான என்எஸ்ஓ மற்றும் அந் நிறுவன மென்பொருள் தான் பெகாசுஸ் இயங்கி வருவது பற்றி மத்திய அரசுக்கு முன்பே தெரியும் என்று புதிய விஷயத்தை கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: என்எஸ்ஓ போன்ற வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து மென்பொருள் வாங்குவது வழக்கமான ஒன்று. தொழில்நுட்பத்தை உளவுத்துறை, சட்ட அமலாக்கத்துறைக்கு தருவது அதன் வேலையே.

உளவுத்துறை தரும் தகவல்கள், அலர்ட்டுகள் அடிப்படையில் கண்காணிப்புகள் அவசியம் என்று உள்துறை கருதினால் மட்டுமே கண்காணிக்கப்படும். மத்திய அரசால் கண்காணிக்கப்படுபவர்களை விட, மாநிலங்களில் கண்காணிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

எனது பதவிக்காலத்தில் (2009-2011) 4,000 முதல் 8,000 பேர் மத்திய அரசால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். ஒருவரை கண்காணிக்க வேண்டும் என்றால் அதற்கு சில சட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஏதேனும் ஒரு உளவு நிறுவனம், ஒருவரை கண்காணிக்க வேண்டும் என்றால், எத்தனை நாட்கள் அந்த நபரை கண்காணிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு அனுமதி பெற வேண்டும். அதன் பிறகு அந்த காலக்கெடு நீட்டிக்க விரும்பினால், அதற்கு அனுமதி வாங்க உள்துறையை அணுக வேண்டும்.

இதில் மத்திய அரசு மட்டும் தான் உளவு பார்க்கிறது என்று இல்லை. அனைத்து மாநில அரசுகளும் அவர்களுக்கு கிடைக்க பெறும் தகவல்களின் அடிப்படையில் உளவு பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றன.

தனியார் உளவு நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருவது அரசாங்கத்துக்கு முன்பே தெரியும் என்னும் போது, அவர்களை கண்காணிப்பது யார்? என்றார்.

இது குறித்து சைபர் துறை வல்லுநர் ராமன்ஜித் கிமா கூறியிருப்பதாவது: ஒருவேளை என்எஸ்ஓ நிறுவனத்தின் உளவு பணி முன்பே அரசுக்கு தெரிந்திருந்தால், அவர்கள் எப்படி இயங்குகிறார்கள், விதிகளை மீறுகிறார்களா என்பதை அறிய வேண்டும் என்றார்.