டில்லி:
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் தகவல்களை கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். உலகளவில் சிறந்த வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க இச்சட்டம் உதவியாக இருந்து வருகிறது. இதன் மூலம் ரேசன் கடை, பென்சன் முதல் பெரிய அளவிலான ஊழல்கள் வெளிகொண்டு வர காரணமாக விளங்குகிறது.
மத்திய, மாநில அரசுகளின் பொறுப்புகளை உணர்த்தவும் இது உதவுகிறது. அரசு ஊழியர்களின் கல்வி தகுதி முதல் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை அம்பலடுத்தவும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் துணை புரிந்து வருகிறது. இந்த வகையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சட்ட திருத்தம் குறித்த விபரங்களை மக்கள் பார்வைக்கு மத்திய அரசு வெளியிடவில்லை. எனினும் சட்ட திருத்தம் மூலம் மத்திய, மாநில அரசுகளின் பணியாற்றும் தகவல் ஆணையர்கள் பதவி அந்தஸ்தை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய தலைமை தகவல் ஆணையரின் சம்பளம், படி ஆகிய இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு இணையாக வழங்கப்படுகிறது.
இது அப்படியே தொடர செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே சமயம் மத்திய, மாநில தகவல் ஆணையர்களின் சம்பள விகிதம் தேர்தல் ஆணையர்களுக்கு இணையாக வழங்கப்படுகிறது. தலைமை மற்றும் இதர தேர்தல் ஆணையர்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையான சம்பளம் வழங்கப்படுகிறது. இது நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டதாகும்.
புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் மத்திய, மாநில தகவல் ஆணையர்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இணையான சம்பளம் வழங்கப்படுவதில் இருந்து மாற்றம் செய்யப்படுகிறது. அதோடு இவர்களுக்கான சம்பளத்தை மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ள வேண்டும் என மாற்றி அமைக்கப்படவுள்ளது. மத்திய தலைமை தகவல் ஆணையர் என்பது மத்திய அரசின் செயலாளர் அந்தஸ்திலும், தகவல் ஆணையர்கள் இணை செயலாளர் அல்லது கூடுதல் செயலாளர் அந்தஸ்திலும் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக கூடுதல் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி ஒய்வுபெற்ற பின்னர் தகவல் ஆணையராக நியமிக்கப்படும் போது திடீரென அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அந்தஸ்து வந்துவிடுகிறது. அதோடு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் ஆணையர்கள் கூடுதல் ஆணையர் அந்தஸ்திலானவர்களை தான் நியமனம் செய்ய வேண்டும் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று சட்டத்திருத்ததை மத்திய அரசு நியாயப்படுகித்துகிறது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகிறது. சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.