சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, பல்கலைக்கழகங்கள் நடத்துகின்ற அரசு கலை கல்லூரிகளை எல்லாம் அரசே எடுத்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், பெண்களுக்கான ஜிம் வசதி குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், தமிழ்நாட்டில் மேலும், 316 துணை மின் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர்கள் பதில் கூறினார்.
தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று காலை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, சட்டபேரவை உறுப்பினர் கோ.தளபதி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மதுரை கள்ளாகுளத்தில் ஒரு கல்லூரி உள்ளது, அதை அரசு கலை கல்லூரியாக மாற்றினால் ஏழை மக்களுக்கு உதவியாக இருக்கும், அரசு இதை எடுத்து கொள்ள முன்வருமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் கூறிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழகங்கள் நடத்துகின்ற அரசு கலை கல்லூரிகளை எல்லாம் அரசே எடுத்து கொள்ள முடிவு செய்துள்ளோம். நீங்க கூட ஒண்ணு சொல்லியிருக்கீங்க, என சபாநாயகரை நோக்கி அமைச்சர் குறிப்பிட்டார். இதற்கு சபாநாயகர் அப்பாவு, இந்த ஆண்டேவா? என கேட்டார். அதற்கு அமைச்சர் பொன்முடி, இந்த ஆண்டே உங்களுக்கு வேணுமா, நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் உள்ள காலி இடங்களை கவுன்சிலிங் நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை சபாநாயகர் பிச்சாண்டி பேரவையில் கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் கூறிய அமைச்சர் பொன்முடி, “கவுன்சிலிங் என்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று. கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு போதிய அவகாசம். வழங்குகிறோம். விண்ணப்பிக்காத மாணவர்களுக்கும் போதிய வாய்ப்பு வழங்கி கல்லூரியில் சேர நடவடிக்கை எடுக்கிறோம்” என கூறினார்.
இதையடுத்து, அரசு கொறடா கோ.வி.செழியன் சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் சாலைகளில், மொட்டை மாடிகளில் உடற்பயிற்சி கூடங்களில், உடற்பயிற்சி செய்கின்றனர், ஆனால் வீட்டில் உள்ள பெண்கள் டிவியைப் பார்த்து பார்த்து உடலை கட்டுகோப்பாக வைத்துகொள்ள விரும்புகின்றனர், ஆகவே ஊராட்சி ஒன்றியங்களில் உடற்பயிற்சி கூடம் வைத்து கொடுக்க அரசு முன்வர வேண்டுமெனவும், அரசு முன்வந்தால் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி நிதியிலேயே உபகரணங்கள் வாங்கி கொடுக்க தயாராக உள்ளோம் அதற்கும் வழிவகை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
அப்போது பெண்கள் மீது இவ்வளவு அக்கறை வைத்துள்ளீர்கள் நன்றி என சபாநாயகர் பாராட்டினார். அதன்பிறகு பதில் அளித்த ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் உடல் பயிற்சி செய்வதால் உடல் நலமும் மன நலமும் சிறப்பாக இருக்கும் என்றும் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்றும் கூறிய அவர் எதிர் காலத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் உடற்பயிற்சி கூடம் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என்றார்.
தொடர்ந்து மற்றொரு உறுப்பினர் மின்தடை ஏற்படாதவாறு கூடுதல் மின்நிலையங்கள் அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கூடுதலாக 316 துணை மின் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில் தேவையின் அடிப்படையில் மேலும், துணை மின் நிலையங்கள் அமைப்பது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.