புதுடெல்லி:

வெங்காய ஏற்றுமதிக்கான தடை அமலுக்கு வந்தது. அனைத்து வகையான வெங்காயங்களுக்கான ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. அது உடனடியாக அமலுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரா, குஜராத், கிழக்கு ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மைக்காலமாக இடைவிடாமல் பெய்த மழையால் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக வெங்காயத்துக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாட்டினால் சந்தைகளில் வெங்காயத்தின் வரத்து குறைந்தது. நாடு முழுவதும் வெங்காயத்தின் மொத்த விலையும் சில்லறை விலையும் உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


மத்திய அரசின் இந்த தடை உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும், மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

வழக்கமாக மழைக்காலங்களில் வெங்காய தட்டுப்பாடு ஏற்படும்போது மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிப்பது இயல்பான நடவடிக்கை தான். கடந்த ஆண்டும் இதோ போல் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.