சென்னை
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் பணி புரிந்து பாலியல் புகாரினால் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னை கே கே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி தனியார்ப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக ராஜகோபாலன் பணி புரிந்து வருகிறார். இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு ஆபாச குறும் செய்தி அனுப்பியதாகப் புகார் எழுந்தது. மேலும் இவர் ஆன்லைன் வகுப்பு எடுக்கும் போது வெறும் துண்டுடன் வந்து வகுப்புக்கள் நடத்தியதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ராஜகோபாலை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்க வசதியாக காவல்துறை சார்பில் தொலைப்பேசி எண் வெளியிடப்பட்டது, ராஜகோபால் மீது 10க்கும் அதிகமான புகார்கள் வெளியானதாக காவல்துறை தெரிவித்தது.
பத்ம சேஷாத்ரி பள்ளியின் முதல்வர், தாளாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. அவர்களிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. இந்நிலையில் இன்று ராஜகோபாலன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கச் சென்னை காவல் ஆணையர் சங்கர் திவால் உத்தரவு இட்டுள்ளார்.
இந்த உத்தரவு சிறைத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் அடுக்கடுக்காக அவர் மீது புகார் வந்துள்ளதால் ஆசிரியர் மீது அடுத்த கட்ட நடவடிக்கையாகக் குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டு விரைவில் தாக்கல் செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.