சென்னை

குஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 8-க்கும் மேற்பட்டவர்கள் வழக்கறிஞர்கள் ஆவர். காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட சுமார் 200 பேரிடம் தீவிர விசாரணை நடந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் ஜூலை 14ஆம் தேதி அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் ரவுடிகளான சீசிங் ராஜா மற்றும் சம்போ செந்திலை தனிப்படை காவலர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, அருள், ராமு மற்றும் திருமலை உள்ளிட்ட 10 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பெருநகர் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.