சென்னை: தமிழ்நாட்டில் வரலாறு காணாத பெருமழை மற்றும் பேரழிவை ஏற்படுத்திய வடகிழக்கு பருவமழை விடைபெறும் காலம் தொடங்கி விட்டது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் பரவலாக நல்ல மழை பெய்த நிலையில்,  2023 டிசம்பர் முதல்வாரத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை உள்பட 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. அதுபோல டிசம்பர் 3வது வாரத்தில் தென்மாவட்டங்களில் பெய்த பேய் மழையால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வரலாறு காணாத இழப்பை சந்தித்தன. பல கிராமங்கள் இன்னும் வெள்ளத்தில் மீள முடியாத நிலையே தொடர்கிறது. தற்போதும் தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில்,  சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், . இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். மேலும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.  நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது,

அதன்பின்  தமிழ்நாட்டில், வறண்ட வானிலையே தொடரும் என்றும்  அதன்படி, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் விடைபெறும் தருவாய்க்கு வந்துவிட்டது என தெரிவித்து உள்ளது.

முன்னதாக, வடகிழக்கு பருவமழை காலம் ஜனவரி வரை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, பருவமழை தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சில இடங்களில் பெய்தது. இதன் தொடர்ச்சியாக இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும், அதன் பின்னர் ஜனவரி 15ம் தேதியை ஒட்டி வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 15ம் தேதியை ஒட்டி, தென்னிந்திய பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.