பெங்களூரு:
சிறை விதிகளை மீறி வெளியில் சென்று வந்ததாகவும், விதிகளுக்குப் புறம்பாக பார்வையாளர்களைச் சந்தித்ததாகவும் சசிகலா மீது புகார்கள் குவிந்த நிலையில் அவரால் பரப்பன அக்ரஹாரா சிறையில் நல்ல மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்கிறது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உட்பட நால்வர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவர்களில் ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் மற்ற மூவருக்கும் நான்காண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வயது வந்தோர் கல்வியறிவு திட்டத்தின் கீழ் கன்னட மொழி கற்று தரப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, கன்னட எழுத்துகளை உச்சரித்தல், எழுதுதல், வாசித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.
இந்த பயிற்சியை சசிகலாவும், அவருடன் இதே வழக்கில் தண்டனை பெற்றுள்ள இளவரசியும் மேற்கொண்டுள்ளனர். மேலும் கம்ப்யூட்டர் பாடத்தின் அடிப்படைகளும் அவர்களுக்குக் கற்றுத்தரப்படுகிறது.
சசிகலா உற்சாகத்துடன் விரைவாக கன்னடம் கற்று வருகிறார். அதே நேரம், கன்னப்பாடம் குறித்த வாய்மொழி கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை.
மேலும், சிறைச்சாலையில் புத்தகம் வாசிப்பதில் சசிகலா அதிக ஆர்வம் செலுத்துகிறார். அவ்வப்போது தனக்கு வேண்டிய புத்தகங்களை அதிகாரிகளிடம் கேட்கிறார்.
அந்தச் சிறையில் ஆண் கைதிகளுக்கு மட்டும் தான் சிறைச்சாலையில் உள்ள நூலகம் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது. சசிகலா புத்தகம் படிப்பதில் செலுத்திய ஆர்வத்தின் காரணமாக சிறைச்சாலை நூலகத்துறை பெண் கைதிகளுக்கு என்று பிரத்தியேக நூலகம் ஒன்றை ரூ. 30 ஆயிரம் ரூபாய் செலவில் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ஆக, சசிகலாவின் படிப்பார்வத்தால் அச் சிறையிலுள்ள பெண்கைதிகளுக்கு புது நூலகம் கிடைக்க இருக்கிறது.