வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு நூதன முறையில் தங்கம் கடத்தும் கும்பல் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சுங்கதுறை அலுவலக அதிகாரிகளை மேற்கொள்ள காட்டி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில் :
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து இந்தியா வரும் சில விமான நிறுவனங்களின் சர்வதேச விமானங்கள் இந்திய நகரங்களை வந்து சேர்ந்தபின் அதே விமானத்தை உள்நாட்டு விமானமாக வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.
இந்த விமான நிறுவனங்கள் மற்றும் விமான எண்கள் மற்றும் அந்த விமானங்கள் செல்லும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நகரங்களின் விவரம் உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் சேகரித்துள்ள இந்த தங்கம் கடத்தும் கும்பல் நூதன முறையில் தங்கம் கடத்துவதாகக் கூறப்படுகிறது.
உதாரணத்திற்கு சிங்கப்பூரில் இருந்து பெங்களூரு வரும் விமானத்தில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டு வரும் நபர் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் விமானத்தின் பின்னிருக்கை பகுதியில் இருக்கையை முன்பதிவு செய்து பயணம் செய்வார்.
அவர் அந்த இருக்கையின் அல்லது முன்னிருக்கையின் குஷன் மற்றும் இருக்கைப் பலகைக்கு இடையில் இருக்கும் பகுதியில் தான் கொண்டு வந்த தங்கத்தை சொருகி வைத்து விட்டு பெங்களூரு வந்ததும் இறங்கி விடுவார்.
அதோடு தான் வந்து சேர்ந்ததையும் தங்கம் எந்த இருக்கை எண்ணில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரத்தையும் தன்னிடம் தங்கம் கொடுத்தனுப்பிய நபருக்கு தகவல் கொடுத்து விடுவார்.
பின்னர் அதே விமானம், பெங்களூரில் இருந்து வேறு நகரங்களுக்கு உதாரணத்திற்கு சென்னைக்கு வருகிறதென்றால் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வேறு ஒரு நபருக்காக முன்பதிவு செய்து அவரிடம் தங்கம் இருக்கும் இடத்தின் விவரத்தை கூறி அனுப்பிவிடுவார்கள்.
உள்நாட்டு விமானத்தில் பயணிக்கும் நபர் எந்த இருக்கையில் அமர்ந்திருந்தாலும் தங்கம் வைக்கப்பட்டிருக்கும் இருக்கையில் இருந்து தங்கத்தை எப்படியாவது எடுத்துக் கொண்டு சென்னையில் இறங்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுவார்.
பின்னர், தங்கத்துடன் சென்னை இறங்கியதும் பெரும்பாலும் உள்நாட்டு விமான நிலையங்களில் சுங்கத் துறை அதிகாரிகளின் சோதனை இருக்காது என்பதால் இந்த கடத்தல் கும்பல் வெளிநாட்டு தங்கத்தை நூதன முறையில் எளிதாக இந்தியாவுக்குள் கொண்டு வந்து சேர்ப்பதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை, உள்நாட்டு முனையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினாலும், தங்கத்தில் வெளிநாட்டு முத்திரை இருந்த போதும் உள்நாட்டில் வாங்கப்பட்டதற்கான போலி ரசீதுகளை காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்கத்துடன் வெளியேறுகின்றனர்.
இதற்கு முன் ரயில் மற்றும் பேருந்துகளில் தங்கம் கடத்துபவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றங்கள் அவர்களை விடுவித்ததை சுட்டிக்காட்டிய அதிகாரிகள் சர்வதேச விமான நிலையம் போன்று உள்நாட்டு முனையத்திலும் தங்கம் கடத்துவோரை சோதனை செய்ய தேவையான நடவடிக்கையை அரசு உறுதி செய்தால் மட்டுமே இதனை முற்றிலுமாக தடுக்க முடியும் என்று நம்புகின்றனர்.