புனே:
புனேயில் தங்கச்சட்டைமனிதர் நள்ளிரவு விருந்துக்கு அழைக்கப்பட்டு கல்லால் தாக்கி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவரது மகனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் சீட்டுகம்பெனி நடத்தி வந்த தத்தா புகே பெரும் கோடீஸ்வரர். சமீபத்தில் இவர் தங்கத்தினாலேயே செய்யப்பட்ட சட்டை அணிந்து உலா வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சட்டையின் மதிப்பு ரூ.1.27கோடி என்று கணிக்கப்பட்டது. மேலும் மோதிரம், செயின் என்று உடல் முழுதும் நகையுடன் உலா வந்த இவர் “தங்க மனிதன்” என்று அழைக்கப்பட்டார்.
கடந்த வியாழன்று இரவில் ஒரு விருந்துக்கு சென்ற தத்தா புகே, காரை விட்டு இறங்கியதும் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியும், கற்களால் தாக்கியும் கொன்றது. அவரது மகன் கண் முன்பே இந்த கொலை நடந்தது.
இது தொடர்பாக 4பேரைபோலீசார் கைது செய்தனர். சீட்டுப் பணம் தராமல் இழுத்தடித்ததால் ஏற்பட்ட பிரச்சினையில் இந்த கொலை நடந்ததாக ஆரம்பத்தில் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தத்தா புகே வின் மகன் சுபம் துகேவின் நண்பர்கள் தான் இந்த கொலையை செய்தனர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து சுபம் துகேவிடம் காவல் துறையினர் தீவிர விசரணை நடத்தி வருகிறார்கள்.
குறிப்பிட்ட அந்த விருந்து நிகழ்ச்சிக்கு சுபம்துகேதான் தந்தை த்தா புகேவை வற்புறுத்தி அழைத்துவந்ததாலும் தாக்குதல் நடந்த போது பக்கத்தில் எங்கோ அவர் சென்றுவிட்டதாலும் காவல்துறையின் சந்தேகம் சுபம்துகே மீது திரும்பியுள்ளது. மேலும், எப்போதும் பாதுகாவலர்களுடன் வரும் தத்தா புகே அன்று பாதுகாவலர்கள் இல்லாமல் வந்தது ஏன் என்பது குறித்தும் சுபம்துகேவிடம் விசாரணை நடக்கிறது.