மும்பை
மும்பை தங்கச் சந்தையில் இன்று 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 40000 ஐ தாண்டி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே உலகெங்கும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்தியாவில் வருடத்துக்கு 700 முதல் 800 டன் தங்கம் விற்பனை ஆகிறது. அதனால் தங்கத்தின் விலை உயர்வு இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் தங்கம் அதிகம் விற்பனையாகும் நகரமான மும்பையில் இந்த தாக்கம் மேலும் அதிகமாகக் காணப்படுகிறது.
இன்று மும்பை தங்க வர்த்தகச் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.40000 ஐ தாண்டி உள்ளது. இது குறித்த அகில இந்திய தங்க மற்றும் வைர நகை வர்த்தகர் சங்க முன்னால் தலைவர் பச்ராஜ் பமால்வா, “இது எதிர்பாராத அளவு விலை உயர்வு ஆகும். ஆனால் அமெரிக்க டாலர் விலையை விட இந்த விலை உயர்வு 20% குறைவாக உள்ளது.
கடந்த 2011 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 10 கிராம் தங்கத்தின் விலை 1920 அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலை 1545 டாலராக உள்ளது. உலக அரசியல் மற்றும் வர்த்தகப் போரின் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில மாதங்களில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ 41000 ஐ எட்டி விடும்.
அதே நேரத்தில் தற்போது தங்கத்தை அதிகம் பேர் வாங்குவதை நிறுத்தி உள்ளனர். வழக்கத்தை விட இப்போது 10% தங்க விற்பனை குறைந்துள்ளது. மாறாக பழைய தங்க நகைகளை உருக்கி புது நகைகள் செய்துக் கொள்வது அதிகரித்துள்ளது. பழைய தங்க நகைகளை அழித்து புது நகைகள் செய்வது தற்போது 70% வரை அதிகரித்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் தற்போது தங்கத்தின் விலை அதிகமாக உள்ளதால் செய்கூலி மட்டும் கொடுத்து பழைய நகைகளை அழித்து புதிய நகை செய்வதே மலிவானது என மக்கள் கருதுவதாகும். விரைவில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் 10 கிராம், தங்கம் அப்போது ரூ.41000 ஐ தாண்டிவிடும்” என தெரிவித்துள்ளார்.