தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதால் திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளில் பெண்கள் மூன்றுக்கும் மேற்பட்ட தங்க நகைகளை அணிய தடை விதித்து உத்தரகாண்ட் மாநில கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.

டேராடூன் மாவட்டத்தில் உள்ள கந்தர் மற்றும் இந்திராணி கிராமங்களின் உள்ளூர் பஞ்சாயத்துகள் இதை அறிவித்துள்ளன.

 

இந்த உத்தரவின்படி, பெண்கள் திருமணங்களில் மூக்குத்தி, காதணிகள் மற்றும் மங்களசூத்திரம் மட்டுமே அணிய அனுமதிக்கப்படுவார்கள். விதியை மீறினால் ₹50,000 அபராதம் விதிக்கப்படும்.

‘ஒருபுறம், தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. மறுபுறம், சமூகத்தில் தங்கள் அந்தஸ்த்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தை பெண்கள் எதிர்கொள்கின்றனர். இது குடும்ப மோதல்கள் மற்றும் நிதி அழுத்தங்களுக்கு வழிவகுக்கிறது. இந்த சமத்துவமின்மையைக் குறைக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்,’ என்று கந்தர் கிராமத்தின் தலைவர் அர்ஜுன் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாயத்து முடிவை வரவேற்ற பெண்கள், விதியில் உள்ள சமத்துவமின்மையை எதிர்த்தனர்.

‘சமத்துவத்தை அடைய, பெண்கள் நகைகள் அணிய தடை செய்யப்படுவது போல, ஆண்கள் விலையுயர்ந்த மதுபானங்களை அருந்தவும் தடை செய்ய வேண்டும். தங்கம் ஒரு முதலீடு மற்றும் கடினமான காலங்களில் பயனுள்ளதாக இருக்கும். மது அருந்துவதால் என்ன பயன்?’ என்று ஜான்சார் பகுதியைச் சேர்ந்த பெண்கள் குரலெழுப்பியுள்ளனர்.

‘இப்போதெல்லாம், திருமண வீடுகளில் விலையுயர்ந்த மது மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குவது அதிகரித்து வருகிறது. செலவுகளைக் குறைப்பது பற்றிப் பேசினால், விழாக்களில் மது உள்ளிட்ட ஆடம்பர செலவுகளையும் தடை செய்ய வேண்டும்’ என்று கூறுகின்றனர்.

‘நகைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இருப்பினும், மது மற்றும் பிற செலவுகளைக் குறைக்க வேண்டும் என்ற பெண்களின் கோரிக்கையும் நியாயமானது தான் பஞ்சாயத்து தலைவர்கள் இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று ஆண்கள் சிலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

‘பழங்குடி சமூகம் அதிகமாக இருக்கும் ஜான்சார் பகுதியில், பெரும்பாலான மக்கள் ஏழைகள். பஞ்சாயத்தின் முடிவு வரவேற்கத்தக்கது’ என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.