மும்பை: தங்கம் மற்றும் ஆபரணங்களுக்கான தேவை, நடப்பாண்டில் 30% வரை வீழ்ச்சி அடையும் என்று தெரிவித்துள்ளது இந்திய வர்த்தக சபை.

நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% பங்களிப்பை கொண்டுள்ளது. நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றுக்கான தேவை நடப்பாண்டில் ஆண்டில் 30% குறையும் என்று இந்திய வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

மேலும் கூறப்படுவதாவது; நம் நாட்டில், திருமணங்களை முன்னிட்டே நகை விற்பனை அதிகளவில் நடைபெறும். இந்நிலையில், தற்போது பல திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதும் தடைபட்டுள்ளது.

நடப்பாண்டில் தங்கத்தின் தேவை, 700 – 800 டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முன்பாகவே, கடுமையான விலை ஏற்ற – இறக்கங்கள் தேவையை அதிகம் பாதித்துள்ளன.

நாட்டின் சமூகப் பொருளாதாரத்திற்கும், தங்கத்துக்கும் இடையே வலுவான தொடர்பிருப்பதால், இந்தியாவின் சராசரி நீண்டகால தங்கத்தின் தேவை 850 டன் என்பதாக கணிக்கப்பட்டுள்ளது. தற்போது, கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் தங்கத்தின் கொள்முதல், கடந்த ஆண்டில் செய்யப்பட்ட 690 டன்னிலிருந்து 30% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆபரணத் துறையில், நாட்டில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இவர்களது பொருளாதார நிலை தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.