சென்னை:
புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய 30ந்தேதி வரை தடைவிதித்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. பிரதே பரிசோதனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார் பரமசிவம்.
சென்னை நுங்ககம்பாக்கம் ரெ யில்நிலையத்தில் நடைபெற்ற கொடூரமான சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார்,கடந்த 18-ந் தேதி புழல் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டார்.
ராம்குமார் உடலை அரசு டாக்டர்கள் தன்னிச்சையாக பரிசோதனை செய்யக்கூடாது, தனியார் மருத்துவமனை டாக்டர்கள் உடன் இருக்க வேண்டும் என உத்தரவிட கோரி ராம்குமார் தந்தை பரமசிவம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு  நீதிபதி டி.எஸ்.சிவஞானம், தனியார் மருத்துவமனை டாக்டருக்கு அனுமதி மறுத்து, அதற்கு பதிலாக கூடுதலாக மேலும் ஒர அரசு ஆஸ்பத்திரி டாக்டரை  நியமித்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து பரமசிவம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டு இரண்டு நீதிபதிகள் கொண்ட குழுவுக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எஸ்.வைத்தியநாதன்  இருவரும் மாறுபட்ட தீர்ப்பு கூறினர். இதன் காரணமாக வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை 3-வது நீதிபதியாக விசாரிக்க நீதிபதி கிருபாகரன் நியமிக்கப்பட்டார். அவர், தனியார் டாக்டர் நியமன கோரிக்கையை நிராகரித்து,  டாக்டர்கள் குழுவில், டெல்லியில் உள்ள, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை டாக்டரை சேர்த்து கொள்ள உத்தரவு பிறப்பித்தார்.
2ramku
இதை ஏற்றுக்காள்ளாத பரமசிவம் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு,  நேற்று பிற்பகலில், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் முன், ஆஜராகி, ”மனுவை விசாரித்த நீதிபதிகள், வெவ்வேறு விதமாக உத்தரவுகளை பிறப்பித்து உள்ளனர். இந்த வழக்கை விசாரிக்க, ஐந்து நீதிபதிகளை நியமிக்க வேண்டும்,” என்றார்.
அதற்கு, தலைமை நீதிபதி, ”ஏற்கனவே, நான்கு நீதிபதிகள் விசாரித்து விட்டனர்.  அதனால், ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அமைக்க இயலாது;  
இது, அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பிரச்சினை அல்ல;
 நீங்கள் வேண்டுமானால், உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்,” என்று பரமசிவத்தின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.
உடனே, வழக்கறிஞர் சங்கரசுப்பு, ”உச்ச நீதிமன்றத்தை அணுகும் வரை, உடலை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும்,” என்றார். அதற்கு, சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகும்படி, தலைமை நீதிபதி தெரிவித்தார்.
 
இதையடுத்து ராம்குமார் உடலை செப்டம்பர் 30-ம் தேதி வரை ராயப்பேட்டை மருத்துவமனையில் வைத்து பாதுகாக்க சம்பந்தப்பட்ட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.