லோகாம்பிகா அம்மன் திருக்கோயில், கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகிலுள்ள லோகனார்காவு எனுமிடத்தில் அமைந்துள்ளது.
இந்தியாவின் வடபகுதியிலிருந்த நகரிகர் எனும் ஆரியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தைத் தேடித் தெற்கு நோக்கிச் செல்ல விரும்பினர். அவர்களது குலதெய்வமான லோகாம்பிகையையும், தங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டுமென்று நினைத்த அவர்கள், லோகாம்பிகையின் கோவிலுக்குச் சென்று, தங்களுடன் வரும்படி வேண்டினர்.
அவர்களின் வேண்டுதலைக் கேட்ட அவள், அவர்களுடன் வருவதற்குச் சம்மதித்தாலும், அதற்கு ஒரு நிபந்தனையையும் சொன்னாள். நகரிகர்கள் கூட்டமாகச் செல்லும் போது, அவர்களின் பின்னால் அவள் வருவதாகவும், அந்தக் கூட்டத்தினர் யாரும் அவள் வருகிறாளா? என்று பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது என்றும், அப்படித் திரும்பிப் பார்த்தால் அங்கிருந்து உடனடியாக மறைந்து சென்று விடுவேன் என்பதே அந்த நிபந்தனை.
நகரிகர்களும் அவளது நிபந்தனையை ஏற்றுக் கொண்டனர். நகரிகர்கள் கூட்டமாகச் சென்ற போது, அவர்களின் குலதெய்வமான லோகாம்பிகையும் அவர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள். கேரளத்திலுள்ள புதுப்பனம் எனும் கிராமத்திற்கு வந்து சேர்ந்த அவர்கள், அங்கு தங்கியிருந்து வணிகம் செய்யத் தொடங்கினர்.
இந்நிலையில் ஒருநாள், அந்த ஊர்க்காரர்கள் சிலர் நகரிகர் களில் ஒருவரை ஒழுக்கக் குறைவானவர் என்று பழித்துப் பேசினர். அதனால், மனவருத்த மடைந்த அவர் உயிரை மாய்த்துக் கொண்டார். அதன் பிறகு, அந்த ஊரில் தொடர்ந்து இருக்க விரும்பாத அவர்கள் அங்கிருந்து வேறு ஊருக்குச் சென்றனர்.
அவர்கள் செல்லும் வழியிலிருந்த ஓலம்பலம் எனுமிடத்தில் சில நாட்கள் தங்கினர். பின்னர் அங்கிருந்து வேறு இடம் தேடிக் கூட்டமாகச் செல்லத் தொடங்கினர். அந்தக் கூட்டத்தின் பின்னால், அவர்களின் குலதெய்வமான லோகாம்பிகையும் பின் தொடந்து சென்றாள்.
அப்படிச் சென்ற வழியில், அங்கிருந்த கிராமத்து மக்களின் கண்களுக்கு லோகாம்பிகை தெரிந்தாள். கிராமத்தினர் நகரிகர்களிடம், உங்கள் கூட்டத்தின் பின்னால் நடந்து வரும் அழகிய பெண் யார்? எனக் கேட்டனர். நகரிகர்கள், லோகாம்பிகை விதித்த நிபந்தனையை மறந்து, தங்களுக்குப் பின்னால் வருவது யார்? என்று தெரிந்து கொள்ளும் ஆவலுடன் திரும்பிப் பார்த்தனர். அடுத்த நிமிடம், அவள் யார் கண்களுக்கும் தெரியாமல் மறைந்து போனாள்.
தங்களின் குலதெய்வம் லோகாம்பிகை சொன்ன நிபந்தனையை மீறிப் பின்னால் திரும்பிப் பார்த்துத் தவறு செய்து விட்டோமே… என்று வருத்தமடைந்த அவர்கள் அந்தப் பகுதியைச் சுற்றிலும் தேடினர். அவர்களால் லோகாம்பிகையைக் காண முடியவில்லை.
நகரிகர்கள் கூட்டத்தின் தலைவர், “எங்களுக்குத் துணையாக வந்த தெய்வமே, எங்கள் தவறை மன்னித்து, எங்களுக்குக் காட்சியளிக்க வேண்டும், இல்லையெனில் இந்த மலையை விட்டு நாங்கள் கீழிறங்க மாட்டோம்” என்று சொல்லியபடி, அருகிலிருந்த கொடைக்காட்டு (பயங்குட்டு என்றும் சொல்கிறார்கள்) மலையின் மீது, தனது கூட்டத்தினருடன் சேர்ந்து ஏறத் தொடங்கினார்.
மலை உச்சியில் அவர்களுக்குக் காட்சியளித்த லோகாம்பிகையை அனைவரும் வணங்கித் தங்களை மன்னிக்கும்படி வேண்டினர். பின்னர், மீண்டும் தங்களுடன் வரும்படி அழைத்தனர். அப்போது அவள், மலையுச்சியிலிருந்து ஒரு அம்பைத் தொடுக் கும்படியும், அந்த அம்பு விழுமிடத்தில் தனக்குக் கோவில் ஒன்று கட்டும்படியும் உத்தரவிட்டாள்.
அதை ஏற்ற தலைவர், அங்கிருந்து ஒரு அம்பைத் தொடுத்தார். அது மலையின் கீழ்ப்பகுதியிலிருந்த ஒரு மரத்தைத் துளைத்து நின்றது. அந்த இடத்தில் லோகாம்பிகைக்குக் கோவில் கட்டப்பட்டது. அந்த இடம் லோகனார்காவு என்று பெயரும் பெற்றது.
இக்கோவில் தினமும் அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இங்கு வழி படும் பக்தர்கள் எந்தக் கோரிக்கையை முன் வைத்தாலும், அம்மன் அதை உடனடியாக நிறைவேற்றித் தருவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. பக்தர்களும் தங்களது வேண்டுதல் நிறைவடைந்த பின்பு, இரட்டி பாயசம், வலிய வட்டலம் பாயசம் ஆகியவற்றை அம்மனுக்குப் படைத்து, நெய்விளக்கு ஏற்றி, மலர்களை அளித்து, நன்றி தெரிவித்து வழிபடுகின்றனர்.