பனாஜி
கோவாவில் மறைந்த முதல்வர் மகன் உத்பல் பாரிக்கர் பாஜகவில் இருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
வரும் 14 ஆம் தேதி அன்று கோவாவில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. பாஜக சார்பில் பனாஜி தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் மகன் உத்பல் பாரிக்கர் அக்கட்சி தலைமையிடம் வாய்ப்பு கேட்டிருந்தார். கோவாவில் போட்டியிடும் 34 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை.
இதையொட்டி உத்பல் பாரிக்கர் பாஜவில் இருந்து விலகினார். கோவா பாஜ தலைவர் சதானந்த் தனவதேவுக்கு ராஜினாமா கடிதத்தை உத்பல் பாரிக்கர் அனுப்பினார். தற்போது பனாஜி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்து வீடு வீடாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் இன்று பனாஜியில் வீடு வீடாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் “எனக்கு பாஜக புதிய உறுதிமொழிகளை அளித்ததாகக் கூறுகிறது. ஆனால் இது குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. பனாஜி மக்கள் என்னை ஆதரிப்பார்கள். இங்கு பல பிரச்சனைகள் உள்ளன.
எனது தேர்தல் அறிக்கையை நான் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடுவேன். கோவாவில் சாலைகள், வடிகால் அமைப்புகளை மேம்படுத்த வேண்டும், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியை முறையாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் கோவா மாநிலப் பொருளாதாரம் புத்துயிர் பெறும்’ எனத் தெரிவித்துள்ளார்.