நெட்டிசன்:

சாவித்திரி கண்ணன் முகநூல் பதிவு…

எப்படி ஜி.கே.வாசனுக்கு எம்.பி சீட் கொடுக்கப்பட்டது என ஆச்சரியத்துடன் பலரும் கேட்கிறார்கள்! ஆனால், எனக்கு இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!

அந்தக் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ கிடையாது, ஒரு எம்.பி கிடையாது! அடிப்படை கட்டமைப்பு கூட பலமாக இல்லை! வாக்கு வங்கி சுத்தமாக இல்லை!

ஜி.கே.வாசன் அதிமுகவிடம் வெளிப்படையாக கோரிக்கை வைத்ததாகக் கூட தெரியவில்லை!

ஆயினும், பெரிய பிரயத்தனமில்லாமல், தானாக அதிமுக வலிந்து தருவது போன்ற ஒரு தோற்றம்!
பாஜகவின் கட்டளை தான் அதிமுக தன் கட்சியிலேயே பலர் இருக்க, வாசனுக்கு பதவியை தாரை வார்த்துள்ளது.

வாசனுக்கு இன்றைக்குள்ள மரியாதையெல்லாம், இந்த மாதிரியான முக்கியத்துவம் எல்லாம் அவரது குடும்பம் பல ஆண்டுகளாக காங்கிரஸ் என்ற அதிகார மையத்திடம் பெற்ற நெருக்கத்தால் பெற்றவைதாம்!

அரசியலில் எந்த முன் அனுபவமும் இல்லாமல் நுழைந்த வாசனுக்கு காங்கிரசில் இரு முறை ராஜ்ஜியசபை வாய்ப்பும், ஒரு முறை மத்திய அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. அந்த வகையில் தான் காங்கிரஸால் தான் அவர் அடையாளம் பெற்றார்!

ஆனால், தானே தமிழக காங்கிரசின் அடையாளம் என்று சிறுபிள்ளைத் தனமாக அவர் நம்பியதன் விளைவே கட்சியில் இருந்து வெளியேறி, தானும் தனிமைப்பட்டு,தன்னை நம்பி வந்தவர்களையும் தனிமைப்படுத்திவிட்டார். தன்க்குள்ள கார்ப்பரேட் லாபியும், மேலிடத் தொடர்புகளும் தன்னை காலம் முழுக்க காப்பாற்றும் என அவர் நம்புகிறார்!

நாடு இருக்கும் ஒரு ஆபத்தான சூழலில் வாய் பேசா மடந்தையான – அதே சமயம் சுய நலம் சார்ந்த சூதுவாதுகளில் கைதேர்ந்த – வாசன் போன்றவர்கள் ராஜ்ஜியசபா செல்வதால் தமிழகத்திற்கோ, இந்தியாவின் எதிர்கால நலனுக்குக்கோ என்ன நன்மை கிடைத்துவிடும் என யோசிக்கும் போது தான் கவலையளிக்கிறது! மற்றபடி எனக்கு அவர் மீது தனிப்பட்ட எந்த காழ்ப்புணர்ச்சியும் கடுகளவும் கிடையாது! இன்னும் சொல்வதென்றால்,தனிப்பட்ட முறையில் பழக இனிமையானவர்,மென்மையானவர்!

வாசனுக்கு ஒரு பதவியும்,முக்கியத்துவமும் தருவதால் தமிழகத்தில் காங்கிரசை பலவீனப்படுத்தலாம் என பாஜக நம்புவதாகத் தெரிகிறது. வருங்காலத்தில் அவருமே கூட பாஜகவில் சேரக்கூடுமோ,என்னவோ!

ஆனால், இந்திய அரசியலில் இன்றுள்ள ஒரு இக்கட்டான காலகட்டத்தில் வாசன் பாஜக வசம் சென்றது அவரது குடும்பத்தின் பாரம்பரியமான காங்கிரஸ் கலாச்சாரத்திற்கு செய்த மிகப் பெரிய இழுக்காகவே பார்க்கப்படும்!

ராஜ்ஜிய சபா எம்.பி பதவி அவருக்கு கிடைத்த வெகுமானமல்ல! அவமானம் என்பதை அவர் வெகு விரைவில் உணரும் காலம் வரக்கூடும் என நான் நம்புகிறேன்!