பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த மேற்குவங்கத்தின் கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா(ஜிஜேஎம்) என்ற கட்சி, தற்போது அக்கூட்டணியிலிருந்து விலகியுள்ளதுடன், அடுத்தாண்டு நடைபெறவுள்ள மேற்குவங்க சட்டசபைத் தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
ஜிஜேஎம் கட்சியின் தலைவர் பிமால் குருங் இதை அறிவித்துள்ளார். இது, அம்மாநில அரசியலில் பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. வரும் சட்டபைத் தேர்தலில், டார்ஜிலிங் பிராந்தியத்தின் மக்கள், பாரதீய ஜனதாவுக்கு தக்கப் பாடம் புகட்டுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த பிமால் குருங், கடந்த 2017ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்தார். டார்ஜிலிங்கின் செளக் பஜார் பகுதியிலுள்ள கலிம்பாங் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட கிரனேட் தாக்குதலில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ், இவர்மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அந்த தாக்குதல் நடைபெற்ற சமயத்தில், டார்ஜிலிங் பகுதியில் முழு அடைப்பை அறிவித்து நடத்திக் கொண்டிருந்தார் இந்த பிமால் குருங்.
தற்போது இந்த ஜிஜேஎம் கட்சி, தனது ஆதரவை மம்தா பானர்ஜியின் கட்சிக்கு அறிவித்திருப்பதால், வரும் சட்டமன்ற தேர்தலில் டார்ஜிலிங் பகுதியின் அரசியல் கணக்குகள் பெரியளவில் மாறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவு அதிகரிக்கும் என்றும், பாரதீய ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் முடிவடைந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், டார்ஜிலிங் பகுதியின் பாரதீய ஜனதா மக்களவை உறுப்பினர் ராஜு பிஸ்தா, நாடாளுமன்றத்தில் இந்த தனிமாநில கோரிக்கையை எழுப்பினார். அவரின் கோரிக்கைக்குப் பின்னால், ஜிஜேஎம் தலைவர்களின் நெருக்கடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
டார்ஜிலிங் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மற்றும் நீண்டநாட்கள் கிடப்பில் போடப்பட்டுள்ள தனி மாநிலக் கோரிக்கை தொடர்பாக விரைந்து முடிவெடுக்க வேண்டுமாய், மத்திய அமைச்சரவையை தான் கேட்டுக்கொண்டுள்ளதாகவும், மேலும், இந்த விஷயமாக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று, தான் நாடாளுமன்றத்தையும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார் மக்களவை உறுப்பினர் ராஜு பிஸ்தா.
பாரதீய ஜனதாவைப் பொறுத்தவரை, கூர்க்காலாந்து தொடர்பான தனது நிலைப்பாட்டை அவ்வப்போது மாற்றிக்கொள்கிறது.
ஜிஜேஎம் என்பது டார்ஜிலிங் மலைப் பகுதியில், ஒரு மக்கள் செல்வாக்குள்ள கட்சியாகும். கடந்த 2009ம் ஆண்டு தனியாக கட்சியை உருவாக்கிய பிமால் குருங், பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்து அக்கட்சி வெற்றிபெற உதவினார். கடந்த 2011ம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில், அப்பகுதியில் ஜிஜேஎம் சார்பாக 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வென்றனர்.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், டார்ஜிலிங் மக்களவைத் தேர்தலில், தனது வேட்பாளருக்கு, ஜிஜேஎம் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்கு மம்தா பானர்ஜி முயன்றாலும், அக்கட்சியின் ஆதரவு கிடைத்ததோ பாரதீய ஜனதாவுக்குத்தான். இதனால், பா.ஜ. வென்றது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், வடக்கு மேற்குவங்க மாநிலத்தில் இருந்த 8 மக்களவைத் தொகுதிகளில் 7ஐ வென்றது பாரதீய ஜனதா. அப்பகுதியில் மம்தா கட்சிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அப்பகுதியிலுள்ள 56 சட்டமன்ற தொகுதிகளில், 50ஐ வெல்வதற்கு பாரதீய ஜனதா திட்டமிட்டு வந்தது.
இந்நிலையில், ஜிஜேஎம் கட்சி, கூட்டணியிலிருந்து விலகி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதானது, பாரதீய ஜனதாவுக்கு சரிவாகவும், மம்தாவுக்கு ஏற்றமாகவும் பார்க்கப்படுகிறது.