ஸ்ரீஹரிகோட்டா: பூமியை வட்டமிட்டு கண்காணிக்கும் பணிக்காக ‘ஜிஐ சாட் -1’ என்ற செயற்கைக்கோள் ஏவுதல் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ‘ஜிஎஸஎல்.வி – எப் 10’ என்ற பெயருடைய ராக்கெட் உதவியுடன், மார்ச் 5ம் தேதி(இன்று) விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள்களை, இஸ்ரோ நிறுவனம் பிஎஸ்எல்.வி – ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்கள் உதவியுடன் விண்ணில் செலுத்தி வருகிறது.
அந்தவகையில், புவி கண்காணிப்பு, கடல் ஆய்வு, வேளாண்மை உள்ளிட்டப் பணிகளுக்கு பயன்படும் ‘ஜிஐ சாட் – 1’ என்ற அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இந்த ‘ஜிஐ சாட்-1’ செயற்கைக்கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி – எப் 10 ராக்கெட், ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்படவிருந்தது. இந்நிலையில், தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக ஏவுதல் ஒத்திவைக்கப்படுவதாகவும், ராக்கெட் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்படுகிறது.