திருச்சியில், தாய் ஒருவர் தொடர்ந்து டிவி பார்க்கும் தனது 5 வயது மகளை கண்டிப்பதற்காக தாக்கியதில், அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், காட்டுப்புதூரை சேர்ந்தவர் நித்யகலா. இவர் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் லத்திகா ஸ்ரீ, கோடை விடுமறை காரணமாக வீட்டில் தொடர்ந்து டிவி பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறார். நித்யகலா அவரை அழைத்தும், அச்சிறுமி வராததால் பகலில் வெயிலில் நிற்கும் படி வீட்டிற்கு வெளியே அவரை நிற்கவைத்திருக்கிறார். இதனால் ஏற்கனவே சோர்வடைந்திருந்த லத்திகா ஸ்ரீயை, மாலையில் மீண்டும் வீட்டிற்குள் அழைக்கும்போது அடித்து, கண்டித்துள்ளார். சோர்வு காரணமாக அச்சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு லத்திகா ஸ்ரீயை, நித்யகலா அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே லத்திகா ஸ்ரீ உயிரிழந்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.