லக்னோ

முன்னாள் பாஜக அமைச்சர் சின்மயானந்த் மீது பாலியல் பலாத்காரப் புகார் அளித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆசிரமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் சின்மயானந்த் முன்னாள் மத்திய பாஜக அமைச்சர் ஆவார். அவர் நடத்தி வந்த சட்டக் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவர் சின்மயானந்த் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினார். தான் குளிக்கும்போது எடுத்த புகைப்படத்தைக் காட்டி மிரட்டி தன்னை ஒரு வருடமாக சின்மயானந்த் பலாத்காரம் செய்வதாகப் புகாரில் தெரிவித்தார்.

 

மேலும் அந்தப் பெண் தன்னை ஒவ்வொரு முறையும் சின்மயானந்தின் ஆட்கள் துப்பாக்கி முனையில் அழைத்து வந்ததாகவும் தன்னை பலாத்காரம் செய்ததைக் கண் கண்ணாடியில் காமிரா பொருத்திப் பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அந்தப் பெண் திடீரென காணாமல் போய் மீண்டும் நீதிமன்ற உத்தரவின் பேரில் கண்டு பிடிக்கப்பட்டார்.

அதன் பிறகு சின்மயானந்திடம் விசாரணை நடந்தது. பூட்டிய அறையில் நடந்த அந்த விசாரணை வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. சின்மயானந்த் இது அரசியல் விரோதம் காரணமாக அளிக்கப்பட்ட பொய்ப் புகார் எனக் கூறி வந்துள்ளார். மேலும் அந்தப் பெண் தன்னிடம் பணம் பறிக்க முயன்றதாகவும் தெரிவித்தார்.

இன்று சின்மயானந்த் மீது பாலியல் பலாத்காரப் புகார் எழுப்பிய சட்டக்கல்லூரி மாணவி திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சின்மயானந்தை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.