மதுரை:

சிலம்பட்டி அருகே பெண் சிசுவை எருக்கம் பால் கொடுத்து கொலை செய்துள்ளனர். அந்த குழந்தையின் இறந்த உடல் காவல்துறையினரால் தோண்டி எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்காணூரணியை அடுத்துள்ள மீனாட்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்த  வைரமுருகன்-சௌமியா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.

இதனால், சோகமடைந்த தம்பதிகள் கடந்த 2ம் தேதி, பிறந்த  குழந்தை உடல்நலமின்றி உயிரிழந்ததாக கூறி குழந்தையை வீட்டின் அருகே உள்ள வேப்பமரம் அருகில் குழிதோண்டி  புதைத்துள்ளார்.

குழந்தையின் மரணம் அக்கம்பக்கத்தினரிடையே சந்தேகத்தை எழுப்ப, இது குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.  அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த செக்கானூரணி போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தை பிறந்து  30 நாள் மட்டுமே ஆன நிலையில், அந்த பெண் குழந்தையை  பெற்றோரே கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து உசிலம்பட்டி வட்டாட்சியர் செந்தாமரை, டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான குழு குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி பிரேத பரிசோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து குழந்தையை கொலை செய்ததாக,  சிங்க தேவன், இவரது மகன் வைரமுருகன், இவரது மனைவி செளமியா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில்,  ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் எருக்கம் பால் கொடுத்து கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். வைரமுருகன் என்பவர் வீட்டின் முன்பு பழ வியாபாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி – வீடியோ: பொதிகை குமார்

[youtube-feed feed=1]