ஜெர்மனியைச் சேர்ந்த வெரினிகுங் காக்பிட் தொழிற்சங்கம் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில் பெரும்பாலான பைலட்டுகள் வேலை நேரத்தில் கண் அயர்வதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
விமானப் பயணங்களின் போது தூங்குவது அதன் உறுப்பினர்களுக்கு “கவலைக்குரிய யதார்த்தமாக” மாறிவிட்டது, இது அத்துறையில் “அதிகரித்து வரும் சோர்வு” குறித்த எச்சரிக்கை என்று தெரிவித்துள்ளது.

900 க்கும் மேற்பட்ட விமானிகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 93 சதவீதம் பேர் ஒருமுறையாவது தூங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
44 சதவீதத்தினர் வழக்கமாக தூங்குவதாகவும், 12 சதவீதம் பேர் ஒவ்வொரு பயணத்தின் போதும் தூங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
7 சதவீதம் பேர் எத்தனை முறை கண் அயர்ந்தேன் என்று நினைவில் இல்லை என்று கூறியதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
“ஜெர்மன் விமானி அறைகளில் தூங்குவது நீண்ட காலமாக வழக்கமாகிவிட்டது,” என்று வெரினிகுங் காக்பிட்டின் துணைத் தலைவர் கேத்தரினா டீசல்டோர்ஃப் கூறினார்.
“ஒரு குட்டித் தூக்கம் ஆபத்தானதல்ல” ஆனால் நிரந்தரமாக சோர்வடைந்த விமான அறை பணியாளர்கள் ஒரு குறிப்பிடத்தக்க ஆபத்து,” என்று டீசல்டார்ஃப் மேலும் கூறினார்.
ஊழியர் பற்றாக்குறை மற்றும் “அதிகரிக்கும் செயல்பாட்டு அழுத்தம்” விமானிகளின் நிலைமையை மோசமாக்கியுள்ளதாகவும், “விமானப் பயணத்தின் போது கட்டுப்படுத்தப்பட்ட ஓய்வு கட்டங்கள்” என்று தூக்கத்தை வரையறுத்துள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
வெரினிகுங் காக்பிட் தொழிற்சங்கத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த 10,000 விமானிகள் மற்றும் விமான அறை பணியாளர்கள் தவிர பயிற்சியில் உள்ளவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.