போன்-பே நிறுவனத்தில் ரூ. 820 கோடி முதலீடு செய்தது அமெரிக்க நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக்.
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு வால்மார்ட் நிறுவனத்தின் ஆதரவில் செயல்பட்டு வரும் நிறுவனம் போன்-பே.
இந்தியாவின் மொத்த யுபிஐ பணபரிவர்தனையில் 50 சதவீத பரிவர்த்தனை போன்-பே மூலம் நிகழ்கிறது.
1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய இந்த நிறுவனத்தின் செயலியை 45 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர் இதன்மூலம் ஆண்டுக்கு 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு பரிவர்த்தனை செய்யக்கூடிய வசதியை பெற உள்ளதாக இந்த ஆண்டு துவக்கத்தில் அந்நிறுவனம் தெரிவித்தது.
இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஜெனரல் அட்லாண்டிக் என்ற முதலீட்டு நிறுவனம் போன்-பே நிறுவனத்தில் ரூ. 820 கோடி முதலீடு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் ரூ. 2850 கோடி முதலீடு செய்தது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை ரூ. 8000 கோடி அளவுக்கு முதலீட்டை திரட்டியுள்ள போன்-பே நிறுவனம் துவங்கிய ஏழே ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய யுபிஐ நிறுவனமாக தன்னை நிலைப்படுத்தி உள்ளது.
UPI நெட்வொர்க்கை மேற்பார்வையிடும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அமைப்பு UPI நிறுவனங்களில் முதலீடு செய்ய கட்டுப்பாடுகளை விதிக்க முயன்றது. இது போன்-பே நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று கருதப்பட்டது.
இந்த நிலையில் புதிய கட்டுப்பாடுகளுக்கான காலக்கெடுவை NPCI 2025 வரை நீட்டித்துள்ளது, இதனால் PhonePe நிறுவனத்தின் அதிவேக வளர்ச்சிக்கு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு எந்தவித தடையும் இருக்காது என்று கூறப்படுகிறது.
தவிர, UPI செயலிக்கு போட்டியாக உயர்தொழில்நுட்ப பணப்பரிவர்த்தனை செயலியை உருவாக்க இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருந்த நிலையில் அதைக் கைவிட தற்போது முடிவு செய்துள்ளதும் PhonePe வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.