துபாய் :
பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை முன்கூட்டியே சொல்லும் வழக்கம் ஐக்கிய அரபு நாடுகளில் உண்டு என்றாலும், அங்கு கருக்கலைப்பு என்பது சட்டப்படி குற்றம், இது பெயரளவில் இல்லாமல் நடைமுறையில் உள்ளது.
தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை சொல்ல அங்குள்ள செல்வந்தர்கள் ‘பார்ட்டி’ வைத்து கொண்டாடுவது கடந்த சில ஆண்டுகளாக அங்கு வழக்கமான நடைமுறையாக உள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் குடியிருக்கும் சிரியா நாட்டைச் சேர்ந்த பிரபலங்கள் அனஸ் மற்றும் அசலா மர்வாஹ் தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதால், தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்பதை இரண்டு நாட்களுக்கு முன் புர்ஜ் கலீபா கட்டிடத்தில் லேசர் ஒளியில் விளம்பரப்படுத்தினர்.
இதனை அந்த ஜோடி தங்கள் யூ-டியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டதில், இதுவரை 1.5 கோடி பேர் பார்த்துள்ளனர். இந்த விளம்பரத்திற்கு மட்டும் இந்திய மதிப்பில் சுமாராக 70 லட்சம் ரூபாய் (95000 USD) செலவானதாக தெரிகிறது.
சிரியா நாட்டு அரசியல் தலைவரின் வாரிசான அசலா மர்வாஹ் துபாய் நகரில் இதுபோல் செலவு செய்திருப்பது, சிரியா வாழ் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, சிரியாவில் மக்கள் பசி, பட்டினி, பஞ்சத்தில் இருக்கும் போது தங்கள் நாட்டு அரசியல் தலைவர் ஒருவரின் மகன் இதுபோல் செலவு செய்வது மிகவும் வருத்தமளிப்பதாக கூறுகின்றனர்.
அதேவேளையில், கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டு சுற்றுலா செல்வதை ஊக்கப்படுத்தவே துபாய் அரசு தனது செலவில் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.