“காதல் மன்னன்” ஜெமினி கணேசனின் நூறாவது பிறந்த நாள் இன்று.
1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி பிறந்த ஜெமினியின் நூற்றாண்டு இன்று ஆரம்பமாகும் நிலையில் அவரோடு பழகிய பிரபலங்களின் அனுபவங்கள்:
நடிகர் பிரபு:
“அப்பாவும் ( சிவாஜி) ஜெமினி கணேசனும் ஒருவரை ஒருவர் ‘மாப்ளே’ ‘மாப்ளே’ என்று உரிமையுடன் அழைத்துக்கொள்வார்கள். இதனால் நான், ஜெமினியை மாமா என்று தான் கூப்பிடுவேன்.
நான் ஜெமினியுடன் ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ என்ற ஒரே ஒரு படத்தில் நடித்துள்ளேன். அந்த நினைவுகள் இப்போதும் மனதில் ஓடுகிறது.”
தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன்:
“அந்த காலத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோர் நடித்த படங்களுடன் ரிலீஸ் ஆகும் ஜெமினியின் படங்களும் வெற்றிகரமாக ஓடி வசூலை குவிக்கும். இதனால் அவர்களை ‘மூவேந்தர்கள்’ என்று அப்போது அழைப்பார்கள்.
ஷுட்டிங் இல்லாத சமயங்களிலும் அவர் நேர்த்தியாக உடை அணியும் பழக்கம் கொண்டவர். ஜெமினி கணேசன் கடைசியாக நடித்த படங்களில் , நாங்கள் தயாரித்த ‘ஜெமினி’ படமும் ஒன்று.
அந்த படத்துக்கு ஜெமினி என்று பெயர் வைத்திருந்த காரணத்தால் அவர், அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம். ஜெமினியும் கவுரவ வேடத்தில் நடித்து கொடுத்து எங்களை கவுரவப்படுத்தினார்.”
நடிகை சுஹாசினி :
“கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஜெமினி மாமா நடித்த அத்தனை சினிமாக்களும் என்னை ஈர்த்த படங்கள். ஹீரோயிசம் கலவாத ஹீரோ அவர். இயக்குநர்களின் நடிகர். ’பெண்’ தொடருக்கு ஜெமினியை நான் டைரக்ட் செய்தபோது என் தந்தையை டைரக்ட் செய்தது போல் உணர்ந்தேன்.
எனது சித்தப்பாவின் (கமலஹாசன்) சின்ன வயதில், அவரை அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் அறிமுகம் செய்து, ‘’எனது படங்களில் எல்லாம் கமலஹாசன் இருக்க வேண்டும்’’ என சொல்லி வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார்.
ஜெமினியின் கொடைக்கானல் பங்களாவில் தான் ‘அக்னிநட்சத்திரம்’ கதையை எழுதியதாக மணிரத்னம் அடிக்கடி சொல்வார்.”
நடிகர் டெல்லி கணேஷ்:
“நானும், ஜெமினியும் இரண்டு, மூன்று படங்களில் நடித்திருந்தாலும் எங்களிடையே நல்ல நட்பு உண்டு. மிகவும் நேர்மையான மனிதர். யாரும் அவரை எளிதாக அணுகி பேசலாம். தான் சீனியர் என்ற நினைப்பு ஒரு போதும் இல்லாதவர்.’’
—
பா. பாரதி