ஜெய்பூர்:
பெட்ரோல் விலை உயர்வுக்கு மோடி அரசே காரணம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ராஜஸ்தான் அரசு எரிபொருள் விலையில் அதிக வரி விதிக்கிறது என்ற வதந்தி குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
மோடி அரசு பெட்ரோல் மீது ரூ. 32.90 மற்றும் டீசலுக்கு ரூ. 31.80 என கலால் வரி விதிக்கிறது. அதேசமயம், 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த போது பெட்ரோலுக்கு ரூ.9.20 மற்றும் டீசலுக்கு வெறும் ரூ. 3.46 மட்டுமே கலால் வரி விதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் நலனுக்காக கலால் வரியை தாமதமின்றி மோடி அரசு குறைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 11 நாட்களாக பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது மோடி அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவே. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது இருந்ததைவிட பாதி அளவே காங்கிரஸ் ஆட்சியின் போது இருந்தது” என்று கெலாட் பதிவிட்ட மற்றொரு ட்வீட்டில் தெரிவித்தார்.
மாநிலங்களில் அடிப்படை கலால் வரியின் ஒரு பகுதியை மத்திய அரசு தொடர்ந்து குறைத்து வருவதாகவும், கருவூலத்தை நிரப்புவதற்காகவே மத்திய அரசு, கூடுதல் கலால் வரி மற்றும் சிறப்பு கலால் வரியை அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள கெலாட், மாநில அரசுகள் தங்கள் பொருளாதார வளங்களை உயர்த்த VAT (மதிப்பு கூட்டப்பட்ட வரி) அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக ராஜஸ்தானின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் மாநிலத்தின் வருவாய் குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மாநில அரசு கடந்த மாதத்தில் வாட் வரியை 2 சதவீதம் குறைத்துள்ளது என்றும் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
“இதுபோன்ற எந்தவொரு நிவாரணத்தையும் கொடுப்பதற்கு பதிலாக, மோடி அரசு ஒவ்வொரு நாளும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்து வருகிறது” என்று என்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “ராஜஸ்தான் அரசு பெட்ரோலுக்கு அதிக வரி விதிக்கிறது என்று சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள். பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் பெட்ரோலுக்கு ராஜஸ்தானை விட அதிக வரி விதிக்கப்படுகிறது என்றார்.