சென்னை: சென்னையில் ‘அம்மா’ உணவகங்களை மேம்படுத்த சென்னை  மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளார்.
சென்னை மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் 15 மண்டலங்களில் உள்ள அம்மா உணவங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பெரும் வரவேற்பு பெற்ற அம்மா உணவங்கள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு  கடந்த சில ஆண்டுகளாக முறையாக கவனிக்கப்படாத  நிலையில் இருந்து வருகிறது. இது சென்னை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை மீண்டும் முறையாக செயல்படுத்த வேண்டும் என ஏராளமான கோரிக்ககள் எழுந்தன இதையடுத்து, அம்மா உணவகத்தை மேம்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.21 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, தற்போது  சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அம்மா உணவகங்களை மேம்படுத்த தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில்,  200 கோட்டங்களில், 7 அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 388 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதம் 19ந்தேதி அன்று முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை ஆய்வு செய்து, அங்கு தயாரிக்கப்படும் உணவு மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து,   அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 கோட்டங்களிலும், 7 அரசு மருத்துவமனைகளிலும் சென்ற ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட 388 அம்மா உணவகங்கள் தற்போது தொடர்ந்து செயல்பட்டு ஏழை எளியோருக்கு பயனளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகின்றது. மேற்கூறிய உணவகங்களின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் ஒரு லட்சத்து ஐயாயிரம் பயனாளிகள் உணவு அருந்தும் நிலையில், ஒரு ஆண்டில் சுமார் நான்கு கோடி முறை உணவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மா உணவங்களுக்கு தேவைப்படும் அரிசி, கோதுமை ஆகியவை மானிய விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாகவும், மளிகை பொருள்கள், காய்கறிகள், சமையல் எரிவாயு உருளைகள் போன்றவை திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்தின் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தயிர் ஆவின் நிறுவனத்திடம் பெறப்படுகிறது.
இந்த உணவகங்களில் பணிபுரியும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.300 அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த மூன்றாண்டு களில் ரூ.148.4 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேற்கூறிய பல்வேறு செலவினங்களுக்கும் 2021 மே மாதம் முதல் இதுவரை வரை சென்னை மாநகராட்சியால் சுமார் ரூ.400 கோடி, அரிசி மற்றும் கோதுமைக்கான தமிழ்நாடு அரசின் மானியமாக ரூ.69 கோடியும் என, மொத்தமாக ரூ.469 கோடி செலவிடப்பட்டு இந்த உணவகங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட இந்த அரசு வழிவகுத்துள்ளது.
இன்று (19.7.2024) சென்னை மாநகராட்சி 122ஆவது வார்டில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த உணவகம் செயல்படும் முறை, வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றை சோதனை செய்ததோடு, அங்கு உணவருந்த வந்த பயனாளிகளோடும் உரையாடினார்.
பல்வேறு அம்மா உணவகங்களில் உள்ள பாத்திரங்கள் மற்றும் சமையல் கருவிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவற்றை மாற்றி புதிய பாத்திரங்கள் மற்றும் கருவிகளை ரூ.7 கோடி செலவில் வழங்கிட ஆணையிட்டார்கள். மேலும், ரூ.14 கோடி செலவில் இந்த உணவகங்களை புனரமைத்திடவும் ஆணையிட்டுள்ளார்கள். தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அவ்வப்போது நேரில் சென்று ஆய்வுசெய்து தேவையான உதவிகளை செய்து தருமாறு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.