சென்னை: சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் 7 பாலங்கள் கட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம் மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதுபோல சென்னை அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் கேஜி டீச்சர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.
சென்னை மாநகராட்சியின் டிசம்பர் மாத மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற நடைபெற்றது. இதில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து 91 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, , வடசென்னையில் உள்ள காசிமேடு, முல்லை நகர், மூலக்கொத்தளம், கீழ்ப்பாக்கம், வேலங்காடு, கிருஷ்ணாம்பேட்டை, மயிலாப்பூர், கண்ணம்மா பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட மயானங்களை ரூ.10 கோடியில் சீரமைக்கவும், தற்காலிக மழலைக் கல்வி ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.16,150, ஆயாக்களுக்கு ரூ.10,450 ஆக உயர்த்தி வழங்கவும் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, சென்னையில் மழை காலத்தின்போது ஏற்படும் வெள்ளப்பெருகை தடுக்கும் வகையிலும், அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 7 பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாலவாக்கம், தொரைப்பாக்கம், இளங்கோ நகர், காமராஜர் நகர், கோ சு மணி சாலை, திருகுமாரபுரம் மற்றும் நியூ ஃபாரன்ஸ் சாலை ஆகிய இடங்களில் பாலங்கள் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம், பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் ஓட்டேரி நுல்லா போன்ற நீர்வழிப்பாதைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்கப்படும் என்றும், இந்த பாலத்தின் பயனாக, சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, அதே வேளையில் OMR மற்றும் ECR இடையேயான இணைப்பை மேம்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.