நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் கவுதம் அதானி மீது தொடரப்பட்ட ₹2110 கோடி லஞ்ச மோசடி வழக்கில் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
அதானி குழும நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனம் மீது கடந்த அக்டோபர் 24ம் தேதி அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
கவுதம் அதானி, சாகர் அதானி, வினீத் எஸ் ஜெயின், ரஞ்சித் குப்தா, சிரில் கபெனிஸ், சவுரப் அகர்வால், தீபக் மல்ஹோத்ரா மற்றும் ரூபேஷ் அகர்வால் ஆகிய 8 பேர் மீது தொடரப்பட்ட இந்த வழக்கில் அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற 250 மில்லியன் டாலர் பணத்தை இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்ததில் மோசடி தொடர்பாக இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
20 ஆண்டுகால பசுமைப் பத்திரங்கள் விற்பனை மூலம் 600 மில்லியன் டாலர் (ரூ. 5064 கோடி) திரட்டுவதாக அதானி நிறுவனம் அறிவித்தது.
அமெரிக்க முதலீட்டாளர்களின் பணத்தை திட்டத்தில் முதலீடு செய்ததால், அமெரிக்க சட்டப்படி, அந்த பணத்தை லஞ்சமாக கொடுப்பது குற்றமாகும் அதனால் அமெரிக்காவில் அதானி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டடுள்ளது.
அமெரிக்க, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகளிடம் பொய் சொல்லி இந்த லஞ்சப் பணத்தை வசூலித்ததாக அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2020 மற்றும் 2024 க்கு இடையில், அதானி உட்பட அனைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களும், இந்திய அரசாங்கத்திடம் இருந்து சூரிய ஆற்றல் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் (ரூ. 2110 கோடி) லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டனர். இந்தத் திட்டம் 20 ஆண்டுகளில் $2 பில்லியன் (ரூ 16881 கோடி) லாபத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முறையிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று வந்த நிலையில் கவுதம் அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.